இப்போதே தமிழகத்தில், 2026ம் ஆண்டு தேர்தலுக்கான ஜூரம் அடிக்கத் தொடங்கி விட்டது. ‘கூட்டணி வலுவாக, ஒற்றுமையோடு தான் இருக்கிறது’ என்பதைக் காட்டுவதற்காகவே, முதல்வர் ஸ்டாலினின் 72-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் மேடையேற்றியிருக்கிறது தி.மு.க.
அந்த விழாவிலேயே, ‘வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தான் வெல்லும்’ என அவர்களைப் பேசவும் வைத்து விட்டது. அதே கூட்டத்தில், ‘தி.மு.க கூட்டணியில் விரிசல் விழும் எனக் காத்திருப்பவர்களின் ஆசையில் மண்தான் விழும்’ எனச் சீறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க இப்படித் தெளிவாக இருக்கிறது என்றால், மற்ற முகாம்களிலோ குழப்பங்கள் கும்மியடிக்கின்றன.
“தற்போதிருக்கும் கூட்டணியைக் காபந்து செய்து கொள்ளவே தி.மு.க விரும்புகிறது. அதனால் தான், ‘கொடியேற்றக்கூட அனுமதியில்லை’ என வி.சி.க-வும், ‘தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோகின்றன’ எனத் தோழர்களும் அவ்வப்போது எதிர்க்குரல் எழுப்பினாலும், கவனமாக அந்த விஷயத்தைக் கையாள்கிறது தி.மு.க. ஆனாலும், சலசலப்புகள் எழாமல் இல்லை.
அதேநேரத்தில், ‘தி.மு.க கூட்டணியிலிருந்து யாரும் பிரிந்து வர மாட்டார்களா… அல்லது த.வெ.க-வுடன் ஒரு கூட்டணி அமையாதா…’ என ஏக்கத்தோடு காத்திருக்கிறது அ.தி.மு.க. வழக்கம் போல, ‘மிரட்டல்’ ஆயுதத்தைக் கையிலெடுத்து இலைக் கட்சியை வழிக்குக் கொண்டுவரப் பார்க்கிறது பா.ஜ.க. இவர்களுக்கு இடையே, ‘என்ன முடிவெடுப்பது’ எனத் தெரியாமல் மதில்மேல் பூனையாக விழித்திருக்கிறது த.வெ.க. இப்படி, தமிழக அரசியல் கட்சிகள் பலவும் இடியாப்பக் கூட்டணிக் கணக்குகளுடன் குழம்பி நிற்கின்றன.
2021 சட்டமன்றத் தேர்தலில், வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அளவுக்கு தி.மு.க-வுக்கு உறுதுணையாக இருந்தது அதன் கூட்டணிக் கட்சிகள்தான். 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலிருந்தே, சராசரியாக 55 சதவிகித வாக்குகளைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்து வருகிறது தி.மு.க கூட்டணி. அந்தக் கணக்கில், எந்த ஓட்டையும் விழுந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
நம்மிடம் பேசிய தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “கூட்டணி அமைப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சியின் வாக்குகளும் அந்தந்தக் கூட்டணி வேட்பாளர்களுக்கு உதவ வேண்டும். அந்த வகையில், தி.மு.க கூட்டணியிலுள்ள ‘கெமிஸ்ட்ரி’ வேறெந்தக் கூட்டணியிலும் இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க., பா.ஜ.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ் என அமைந்த தேசிய ஜன நாயகக் கூட்டணியைப் பலரும் சிலாகித்தார்கள். ஆனால், திருவண்ணாமலை, சிதம்பரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிகளிலேயே பா.ம.க-வின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு மடைமாறவில்லை. அந்த லட்சணத்தில்தான் அவர்களுடைய ‘கெமிஸ்ட்ரி’ இருந்தது.
ஆனால், தி.மு.க கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சியின் வாக்குகளும் தி.மு.க-வின் வெற்றிக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கின்றன. அதேபோல, கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு தி.மு.க-வும் உதவியிருக்கிறது. இந்தப் பரஸ்பர உதவியால்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைத்தது.
அதேகாலத்தில் நடந்த 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும், 13 தொகுதிகளில் வெற்றியை தி.மு.க கூட்டணியால் பெறமுடிந்தது. அடுத்தடுத்து நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அத்தனை தேர்தல்களிலும் வெற்றிவாகை சூட முடிந்தது. இந்தக் கூட்டணி கெமிஸ்ட்ரியை 2026-ல் முதல்வர் இழக்க விரும்பவில்லை.
அதனால்தான், கட்சிக் கட்டமைப்பை ஒரு பக்கம் பலப்படுத்திக்கொண்டாலும், கூட்டணிக் கட்சிகளைக் கையாளும் பொறுப்பை சீனியர் அமைச்சரான எ.வ.வேலுவிடம் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாருக்கு, என்ன மனஸ்தாபம் ஏற்பட்டாலும், அவர்களுடைய தேவை எதுவாக இருந்தாலும் அதைச் சரிசெய்து கொடுக்கச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் எளிதாக இருக்காது என்பது தலைமைக்குத் தெரியும். எங்களுடனேயே இருக்கும் வி.சி.க., சி.பி.எம்., த.வா.க போன்ற கட்சிகள் அரசுக்கு எதிராக அவ்வப்போது அதிரடியாகப் பேசுவதும், பிற்பாடு அரசை ஆதரித்துப் போவதுமாகத்தான் இருக்கின்றன. இந்த மனஸ்தாபங்களெல்லாம், சீட் பங்கீடு என வரும்போது மேலும் அதிகரிக்கலாம்.
2021-ல், ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட வி.சி.க., மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டதால் இந்த முறை 15 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ‘அங்கீகாரத்தைத் தக்கவைப்பதற்குக் குறைந்தது ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே, 15 தொகுதிகளுக்குக் கீழ் எங்களுக்குக் குறைக்காதீர்கள்…’ என இப்போதே சொல்லி வருகிறார்கள் சிறுத்தைகள். வி.சி.க-வுக்குக் கூடுதலாக சீட் ஒதுக்கினால், காங்கிரஸ்காரர்களும் இரட்டிப்பாக எதிர்பார்ப்பார்கள். சி.பி.எம்., சி.பி.ஐ கட்சிகளும் தங்கள் எண்ணிக்கையைக் கூட்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளெல்லாம் இந்த முறையும் அதே எண்ணிக்கைக்கும் சின்னத்துக்கும் ஒப்புக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இல்லாத அ.தி.மு.க., த.வெ.க கட்சிகளெல்லாம், ‘அறிவாலயக் கூட்டணியிலிருந்து யாராவது பிரிந்து வர மாட்டார்களா…’ எனக் காத்திருக்கின்றன. எனவே, தன்னுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளையெல்லாம் மிகக் கவனத்துடனேயே கையாள்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சமீபத்தில் சென்னையில் நடந்த முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ‘மீண்டும் இந்த மண்ணில் உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்களோடு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்’ என்று பேசியிருந்தார் திருமாவளவன். அதேபோல, கம்யூனிஸ்ட்டுகள் தொடங்கி காங்கிரஸ் கட்சி வரையில் பேசிய அனைவருமே, 2026 தேர்தலில் தி.மு.க-வுடன்தான் தங்களின் கூட்டணி தொடரப்போவதை உறுதி செய்திருக்கிறார்கள். ஆனாலும், சீட் பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தாகும் வரையில் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்றனர் விரிவாக.
‘ஏக்க’த்தில் அ.தி.மு.க!
தி.மு.க கூடாரத்தில் நம்பிக்கை முழக்கம் பலமாக இருக்கும் நிலையில், ‘கடை விரித்தேன்… கொள்வாரில்லை’ என ஏக்கத்துடன் பரிதவிக்கிறது அ.தி.மு.க. ‘கூட்டணிக்கு யார் வருவார்கள்… உடனிருக்கும் தே.மு.தி.க-வும் தொடருமா, வெளியேறிவிடுமா…’ என ஏகக் குழப்பத்தில் இருக்கிறார்கள் இலைக் கட்சியினர்.
இது குறித்து அ.தி.மு.க சீனியர் அமைப்புச் செயலாளர்கள் சிலர் பேசுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக, செப்டம்பர் 2023-ல் அறிவித்தார் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி. ‘விலகிவிட்டோம்’ என அவர் சொல்லி விட்டாலும், பா.ஜ.க-விடமிருந்து அப்படியொரு வார்த்தை இதுவரை வரவில்லை. போதாக்குறைக்கு, பா.ஜ.க-வினரிடம் ஏக நெருக்கமாக இருக்கிறார், முன்னாள் அமைச்சர் வேலுமணி. தன் மகனின் திருமணத்துக்கு, அமித் ஷாவில் தொடங்கி அண்ணாமலை வரையில் பா.ஜ.க தலைவர்கள் ஒருவரைக்கூட விடாமல் அழைத்திருந்தார். திருமண நிகழ்வுக்கு வந்த அண்ணாமலை உட்பட பா.ஜ.க-வினர் அனைவருமே, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், நத்தம் விசுவநாதன் என அ.தி.மு.க சீனியர்களிடம் பலமாகவே நட்பு பாராட்டினார்கள். இதனால், ‘பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமையுமோ…’ என்கிற பேச்சு கட்சிக்குள்ளேயே தீப்பிடித்திருக்கிறது.
இதில், ஒரு தெளிவைப் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியால் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால், அவரே குழம்பித்தான் போயிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘பா.ஜ.க-வுடன் எப்போதும் கூட்டணி இல்லை’ என்று மேடைக்கு மேடை முழங்கியவர், தேர்தலுக்குப் பிறகு அப்படிப் பேசுவதையே தவிர்த்து விட்டார். அது மட்டுமல்லாமல், ‘அவசியமில்லாமல் பா.ஜ.க-வை விமர்சனம் செய்ய வேண்டாம்’ என்று நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தினார். இதையெல்லாம், பா.ஜ.க-வைத் தீவிரமாக விமர்சிக்கும் மற்ற அரசியல் கட்சிகள் எதுவும் ரசிக்கவில்லை. ‘தி.மு.க கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும். அவர்களோடு, தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் அரவணைத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்’ என்பது எடப்பாடியின் தேர்தல் கணக்கு. ஆனால், பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இல்லாத எடப்பாடியை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. பலமான தலைமை இருக்கும் கட்சியோடுதான் ‘நீ… நான்…’ என்று போட்டி போட்டுக்கொண்டு கூட்டணி சேர்வார்கள். தற்போதைய நிலைமையில், அம்மா இருக்கும்போது இருந்ததைவிடக் கூடுதலான கட்சி உறுப்பினர்கள், மாவட்டக் கழகங்கள், பூத் கமிட்டிகள் அ.தி.மு.க-வில் இருக்கின்றனர். ஆனாலும், வலிமையாகக் கூட்டணி அமைக்கக் கட்சி தடுமாறுகிறது என்றால், பிரச்னை தலைமையிடம்தான் இருக்கிறது. ‘வரும் சட்டமன்றத் தேர்தலிலாவது பலமான கூட்டணி அமையுமா…’ என்கிற ஏக்கம் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டனுக்கும் வந்துவிட்டது” என்றனர்.
மிரட்டல்’ பா.ஜ.க!
‘கூட்டணிக்குக் கட்சிகள் வருமா, வராதா…’ என இலைக் கட்சி வட்டாரங்கள் ஏங்கித் தவிக்கும் நேரத்தில், வழக்கமான தன் ‘மிரட்டல்’ உத்தியைக் கையிலெடுத்திருக்கிறது கமலாலயம். சிவராத்திரி நிகழ்வுக்காக, சமீபத்தில் கோவைக்கு வந்து சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, சில அசைன்மென்ட்டுகளைக் கட்சி நிர்வாகிகளிடமும், நாக்பூர் அமைப்பிடமும் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
பா.ஜ.க-வின் மையக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். “இரண்டு வியூகங்கள்தான் தற்போது டெல்லியில் பேசப்படுகின்றன. ஒன்று, அ.தி.மு.க இல்லாமலேயே வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது. ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வைக் கழற்றிவிட்டு விட்டு, அந்தக் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள், இனி பிரியப்போகிறவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து புதிய கூட்டணி அமைக்கலாம்.
எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க 15 சதவிகித வாக்குகளுக்குக்கீழ் சுருங்கிவிடும். அதோடு அவரது தலைமை காணாமல்போய் விடும். பா.ஜ.க-வின் வாக்குவங்கி அதிகரிப்பதோடு, சில சீட்டுகளில் வெற்றியும் பெறலாம்’ என்கிற வியூகத்தை டெல்லியில் சொல்லியிருக்கிறது அண்ணாமலை தரப்பு.
இரண்டாவது வியூகமாக, ‘அ.தி.மு.க-வை ஒன்றுபடுத்தி, அதனுடன் கூட்டணி அமைப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும்’ என சீனியர்கள் வலியுறுத்துகிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ‘பத்து தொகுதிகளில் வெற்றி, 25 சதவிகித வாக்குவங்கி கிடைக்கும்’ என டெல்லியிடம் உறுதியாகச் சொல்லியிருந்தார் அண்ணாமலை. அந்தக் கணக்கு பொய்த்துவிட்டதால், தற்போது அவரது வியூகத்தை நம்புவதற்கு யோசிக்கிறது டெல்லி. அதனால்தான், அ.தி.மு.க-வை ஒன்றுபடுத்தும் வியூகத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றன.
ரெய்டு… கைது… என ‘மிரட்டல்’ வியூகங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. இன்னும் சில மாதங்களில், டெல்லி அமைப்புகள் மூலமாகக் கூட்டணி முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழலாம்” என்றனர் பூடகமாக.
இப்படிப் பூடகமாகப் பேசக்கூட த.வெ.க-வில் ‘கூட்டணி சப்ஜெக்ட்’ இல்லை என்பதுதான் பிரச்னையே. விஜய்யுடன் ஆலோசனை செய்த ‘ஜன் சுராஜ் கட்சி’யின் தலைவர் பிரசாந்த் கிஷோர், ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க விஜய்க்கு விருப்பமில்லை. தனியாகப் போட்டியிடவே விரும்புகிறார்’ என ஒரு பேட்டியில் போட்டுடைத்துவிட்டார். உடனே பதறிக்கொண்டு, ‘அதிகாரபூர்வக் கொள்கை பரப்புச் செயலாளர்களும், செய்தித் தொடர்பு நிர்வாகிகளும் தெரிவிக்கும் கருத்துகளும் நிலைப்பாடுகளுமே கட்சியினுடையவை. மற்றவர்கள் சொல்வது அல்ல’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த்.
அவரின் விளக்கத்தைவைத்துப் பார்க்கும்போது, கூட்டணி ஆசை இருக்கிறது என்பது புரிகிறது. ஆனால், ‘யாருடன் கூட்டணி அமைப்பது…’ என்பது புரியாமல், மதில்மேல் பூனையாகக் குழம்பி நிற்கிறது த.வெ.க கூடாரம்.
நம்மிடம் பேசிய அந்தக் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “முதன்முதலில் கூட்டணி விவகாரத்தைக் கொளுத்திப்போட்டதே தலைவர் விஜய்தான். ‘நம் தலைமையை ஏற்று வருபவர்களை அரவணைப்போம். அதிகாரப் பகிர்வு அளிப்போம்’ என அவர் வி.சாலை மாநாட்டில் பேசிய பிறகுதான், கூட்டணி பற்றிய எதிர்பார்ப்பு கட்சிக்குள் பலமாக எழுந்தது. அதையொட்டி, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமையப்போவதாகப் பேச்சுகள் எழுந்தன. ‘இப்போதே இலைக் கட்சியுடன் நட்பு பாராட்டிவிட்டால், சீட் பங்கீட்டில் டிமாண்ட் செய்ய முடியாது…’ எனத் தலைமை யோசித்ததோ, என்னவோ… எந்த முடிவையும் எடுக்கவில்லை. தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கவும் இல்லை. மதில்மேல் பூனையாகத்தான் வேடிக்கை பார்க்கிறார்கள் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள்.
தற்போதைக்கு, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில்தான் முழு கவனத்தையும் செலுத்திவருகிறது தலைமை. ஏப்ரல் மாதத்துக்குள், 72,000 பூத்துகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, அவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திட திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கிடையே, கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டப்படவிருக்கின்றன. இதையெல்லாம் முடித்துவிட்டுத்தான், வரும் மே மாதத்திலிருந்து சுற்றுப்பயணம் கிளம்பவிருக்கிறார் தலைவர் விஜய்” என்றனர் விரிவாக.
“வரும் சட்டமன்றத் தேர்தலில், பிரதான கட்சிகளின் வெற்றியையும், யார் ஆட்சியமைக்கப்போகிறார்கள் என்பதையும் பெரிய அளவில் தீர்மானிக்கப்போவது கூட்டணிக் கட்சி களாகத்தான் இருக்கும்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அந்தக் கூட்டணியை வலுவாக அமைத்துக் கொண்டவர்களும் சரி, அமைக்கப் போராடுபவர்களும் சரி… ‘அமைப்போமா, வேண்டாமா?’ எனக் குழம்பிக் கொண்டிருப்பவர்களும் சரி… எல்லோருமே ஒரு வகையான தவிப்பும் பதற்றமுமாகவே இருக்கிறார்கள். தேர்தல் களத்தில் நிற்கும் முக்கியக் கட்சிகளின் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும், ஒன்றை ஒன்று பாதிக்கும் விதமாகவே சிக்கல் முடிச்சுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த இடியாப்பக் கூட்டணிக் கணக்குகளை, பக்குவமாக அவிழ்ப்பவர்களுக்கே வெற்றி காத்திருக்கிறது.