திருவண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள ஆடையூர் இன்று ஒரு சிற்றூராக அமைந்துள்ளது. ஆனால் 1000 வருடங்களுக்கு முன்பு இந்த ஊர் ஒரு நாட்டுப் பிரிவின் தலைநகராக இருந்தது.
இந்த நாட்டிற்கு உட்பட்ட பகுதியாக திருவண்ணாமலை அமைந்திருந்தது. கல்வெட்டுகளில் மதுராந்தக வள நாட்டு ஆடையூர் என 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 13 ஆம் நூற்றாண்டில் பல்குன்றக் கோட்டத்து ஆடையூர் நாடு என்றும் 16, 17 ஆம் நூற்றாண்டில் செங்குன்றக் கோட்டத்து ஆடையூர் என்று குறிப்பிடுகிறது. ஆடையூர் நாட்டில் எல்லை தற்போதைய திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாட்டு மலை வரை மேல் எல்லையாகவும் அப்பகுதியை ஆடையூர் மேல்பற்று என்றும் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள குளக்குடி, மெய்யூர், வாய்விடாந்தாங்கல், போன்ற பகுதியை ஆடையூர் நாட்டு கீழ்பற்று என்ற பகுதியிலும் அமைந்திருந்ததைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தொண்டை மண்டலத்தில் அமைந்திருந்த மிகப் பெரிய நாட்டுப் பகுதியாக ஆடையூர் நாடு காணப்படுகிறது.
ஆடையூரை நாட்டை ஆண்டவர்கள்
ஆடையூர் நாட்டுப் பிரிவு இம்மாவட்ட வரலாற்றில் கிடைக்கும் நாட்டுப் பிரிவுகளில் வித்தியாசமானது சிறப்பானதும் ஆகும். இந்நாட்டுப் பிரிவில் தான் பல்வேறு குறுநில மன்னர் போன்ற அதிகாரிகள் ஆட்சி செய்து வந்ததை காலம் தோறும் அறியும்படி பல்வேறு கல்வெட்டுகள் கிடைக்கின்றன. குறிப்பாக முதலாம் கரிகால சோழ ஆடையூர் நாட்டாழ்வான், இரண்டாம் கரிகார சோழ ஆடையூர் நாடாழ்வான், பெரியுடையான் அமட்டாழாவான் வன்னிய மககள் நாயன் கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வான், மலையன் நரசிங்க பன்மனான கரிகாலசோழ ஆடையூர் நாடாழ்வான். பதஞ்சலிமா முனிக் காடும் பெருமாள் ஆடையூர் நாடாழ்வான், ராஜகம்பீர ஆடையூர் நாடாழ்வான், கோனேரின் மைகொண்டானான கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வான் போன்ற பல அரசு அதிகாரிகள் இந்த ஆடையூர் நாட்டை ஆண்டு வந்தனர். இது போன்று ஒரு நாட்டுப் பிரிவை ஆண்ட அரசு அதிகாரிகள் பெயர் வேறெந்த நாட்டுப் பிரிவிற்கும் அறிய இயலவில்லை.
ஆடையூர்
ஆடையூர் நாட்டின் தலைநகராக இருந்த ஆடையூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு ஒன்று அவ்வூரில் உள்ளது இந்த கல்வெட்டில், சகர ஆண்டு 877 (கி.பி. 955) வாணகோபாடி நாட்டின் பெண்ணை நதியின் வடகரையில் உள்ள காட்டாம்பூண்டி என்ற ஊரைச் சேர்ந்த சேக்கிழான் உலகளந்தான் வீரட்டன் என்பவர் தானமாகக் கொடுத்த செக்கு என்றும் இதில் எண்ணெய் ஆட்டுபவர்கள் திருவண்ணாமலை மகாதேவருக்கு ஒரு முறள் அளவு கொண்ட எண்ணெய்யை காணிக்கையாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இவ்வூரில் உள்ள ஏரிக்கரையில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதகில் ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் ஸ்வஸ்தி ஸ்ரீ அருளயன் செய்த தருமம் என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது அருளயன் என்பவர் இந்த ஏரி மககினை செய்து அளித்துள்ளார். இது போன்ற தானங்கள் அறங்கள் அக்காலத்தில் வழக்கில் இருந்ததை இந்த இரண்டு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
அண்மையில் பதிவு செய்யப்பட்ட சிறப்பான கல்வெட்டு ஒன்று ஆடையூர் கிராமத்தில் பாழடைந்த சிவன் கோயியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கல்வெட்டு ராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு 13? ஆவது செயங்…….. பன்மாகேஷ்வரரக்ஷை என்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து ஆடையூரில் ஒரு சிவன் கோயில் இருந்தது தெரிய வருகிறது. மேலும் திருவண்ணாமலை கோயில் கல்வெட்டில் ஆடையூரில் இருக்கும் சிவனின் பெயர் ராஜேந்திர சோழிஸ்வரமுடைய நாயனார் என்று ஒரு கோயிலும் இரவிகுல ஈஸ்வரமுடைய மகாதேவர் என்ற பெயரில் ஒரு கோயில் நிலம் பற்றி குறிப்பிடுகிறது. இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் ஆடையூரில் இந்த சிவன் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு இராஜேந்திர சோழன் பெயரை வைத்ததும் அறிய முடிகிறது. மேலும் இந்த ஊர் நில எல்லையாக பள்ளிச் சந்தம் என்ற சமணர் கோயிலுக்கு கொடையாக விடப்பட்ட நிலம் பற்றிய குறிப்பும் இருக்கிறது. இந்த திருவண்ணாமலை கோயில் கல்வெட்டில் ஆடையூரில் நாட்டவர் சபை இருந்தது என்றும் ஆடையூரின் மற்றொரு பெயராக ராஜேந்திர சோழ நல்லூர் என்றும் ராஜேந்திரன் சோழன் சாலை என்ற தெரு இருந்ததையும் அறிகிறோம். ஆனால் காலபோக்கில் இந்த ஆடையூர் சிவன் கோயில் முற்றாக சீரழிந்து போனதால் அதன் தொன்மை, வரலாற்றுச் செய்திகள் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. இவை தவிர ஆடையூர் 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று பள்ளியின் அருகில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் ஆடையூர் ஊரின் முகப்பில் 10 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட சன்னியாசி கல்லில் கிரந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் பீஜமந்திர குறிப்பு உள்ளது. அருகில் உள்ள பலகைச் சிற்பத்தில் திருவண்ணாமலையின் மலைப் படம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட ஆடையூரைக் கொண்டாடுவோம்.

