திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.3.46 கோடி ரொக்கம், 305 கிராம் தங்கம், 1,492 கிராம் வெள்ளியும் கிடைத்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நடந்தது. கோயில் இணை ஆணையர் சி.ஜோதி மற்றும் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் நடந்த பணியில், 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளிபிரகாரம், கிரிவலப்பாதை மற்றும் அஷ்டலிங்க சன்னதிகளில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், கோயில் உண்டியல்களில் இருந்து, ரூ.3 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 541-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
மேலும், 305 கிராம் தங்கம், 1,492 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை தொகை கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.