திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் பிரசித்திப்பெற்றதாகும். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் திரு அண்ணாமலையை 14 கி.மீ தொலைவு கொண்ட கிரிவல பாதையில் கிரிவலம் சென்றனர். ஓம் நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தப்படி சென்றனர்.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து கிரிவலம் சென்றனர். இதில் சபரிமலை பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் செவ்வாடை பக்தர்களும் கணிசமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வந்திருந்தனர். பக்தர்களின் கிரிவலம் 2ஆம் நாள் காலை வரை நீடித்தது.

அண்ணாமலையார் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதின. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 4 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர்.பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன.