திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் சிறப்பானதாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவாலயங்களில் சிவகாமி உடனுறை நடராஜரின் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி உடனுறை நடராஜருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை சிவகாமி உடனுறை நடராஜரின் நெற்றியில் வைக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி உடனுறை நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமஞ்சன கோபுர வாயில் வழியாக திருக்கோயிலை சுற்றிய மாட வீதிகளில் உலா வந்தார். குறிப்பாக, ஆனித்திரு மஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய 2 நாட்களில் மட்டுமே திருமஞ்சன கோபுரவாயில் வழியாக நடராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதார். திருகார்த்திகை தீபத்திரு விழாவின் போது நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீப மை பிரசாதமாக வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
வேலூர் மாவட்டம் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் ராஜகோபுர வாயிலில் சிவகாமி உடனுறை நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குடியாத்தத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருப்புலீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியில் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளித்தெரு பகுதியில் ஆருத்ரா தரிசனத்தையையொட்டி நடராஜர் வீதியுலா நடைபெற்றது. உமாமகேஸ்வரி உடனுறை கயிலாயநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் நேற்று நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்களுடன் சிவனடியார்கள் பஜனை பள்ளித்தெரு பகுதியில் வீதி, வீதியாக நடராஜர் திருவீதிஉலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்