கடலூர் மாவட்டம், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது.
வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல் இந்த ஆண்டு, 154 வது தைப்பூச ஜோதி தரிசன விழா, கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, காலை வடலூர் தரும சாலையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி அலங்கரிக்கப்பட்டு, பல்லக்கில் வைத்து சன்மார்க அன்பர்கள் பார்வதிபுரம் கிராம மக்களின் சீர்வரிசைகளை சுமந்தபடி வள்ளலார் நடந்து சென்ற பாதையான தீன்சுவை நீரோடை மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.
பல்லக்கு மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் வள்ளலார் இறைவனுடன் ஜோதியாக கலந்த அறை முன் வைத்து மதியம் திருஅறை திறக்கப்பட்டது. அதை ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர். இது மாலை வரை தரிசனம் நடைபெற்றது.
இதில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலத்தில் இருந்தும் சன்மார்க்க பக்தர்கள் கலந்துகொண்டு திருஅறை தரிசனம் செய்தனர்.