முதல்வரின் திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராதாபுரம் ஊராட்சியில் காந்தியடிகளின் வது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
நமது இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகள் பலர் இருந்தாலும், அவர்களில் முதன்மையாக அடையாளப்படுத்தப்பட்டவர் மகாத்மா காந்தி ஆவார். மகாத்மா காந்தியடிகள் கிராம ராஜ்யம் வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அரசின் சார்பாக பல்வேறு துறைகள் இருந்தாலும், உள்ளாட்சித்துறை என்பது மக்களுடன் நேரடியாக தொடர்புடைய துறையாகும். ஆகவே உள்ளாட்சித்துறை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. இக்கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்படுவது மட்டுமின்றி கிராம மக்களுக்கு தேவையான புதிய திட்டப்பணிகள் செயல்படுத்துவதற்காக தீர்மானங்கள் நிறைவேற்றுவது, ஊராட்சியின் வளர்ச்சிக் குறித்து கிராம மக்களின் கோரிக்கைகளை பெறுவது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக கலைஞர் ஆட்சி நடத்தினார்கள். தமிழ்நாடு அரசு 1994-ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 243ஜி குறிப்பிட்டிருக்கிறது. அந்தவகையில் கலைஞர் ஆட்சிகாலத்தில் 1998 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆண்டிற்கு 4 முறை கிராம சபை கூட்டம் நடத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில், ஊராட்சி மன்றங்களை மேலும் வலுப்படுத்திடவும், அடிப்படை வசதிகளை பெருக்கவும் சட்டப்பேரவை 110 விதிகளின் கீழ் தமிழக முதல்வர் 2 மாதத்திற்கு ஒரு முறை கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஜனவரி 26 குடியரசு தினம், மே -1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் -2 காந்தியடிகள் பிறந்தநாள், மார்ச் -22 உலக தண்ணீர் தினம், நவம்பர் -1 உள்ளாட்சிகள் தினம் என ஆண்டு தோறும் 6 கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிவித்து அதன்படி நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுமைப்பெண் என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகையாக வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். தாய்வீட்டு சீதனம் என்றழக்கப்படுகிற மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்குகிற கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்கி வருகிறார்கள். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிற பொழுது அவர்கள் குடும்ப பொருளாதாரம் உயர்வதற்கு உதவிகரமாக இருக்கும். இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் முதல்வர் பெண்களுக்குரிய திட்டங்களை தான் அதிகமான அளவில் செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதற்கு உந்து சக்தியாக இருக்கிறார்கள். கிராமப் பொருளாதாரம் உருவாக வேண்டுமென்றால் கிராமத்திலுள்ளவர்கள் உழைக்க வேண்டும்.
3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் ராதாபுரம் ஊராட்சியில் ரூ. 2 கோடியே 41 லட்சம் மதிப்பில் சாலை பணிகளும், ரூ. 1 கோடியே 22 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் பணிகள், ரூ. 1 கோடியே 14 லட்சம் மதிப்பில் பள்ளி உட்கட்டமைப்பு பணிகளும், ரூ. 1 கோடியே 29 லட்சம் மதிப்பில் தனிநபர் பணிகளும், ரூ. 39 லட்சம் மதிப்பில் புதிய உட்கட்டமைப்பு பணிகளும், ரூ. 38 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் சுகாதார பணிகளும், ரூ. 34 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 11 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம், ரூ. 5 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கு ஊரக குடியிருப்புகள் பழுது பார்த்தல், ரூ. 5 லட்சம் மதிப்பில் உட்கட்டமைப்பு பராமரிப்பு பணி, ரூ. 17 லட்சம் மதிப்பில் தளவாட பொருட்கள், புதிய விளையாட்டு மைதானம் என மொத்தம் 149 பணிகளுக்கு ரூ. 7 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இராதாபுரம் ஊராட்சி, நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோருதல்.14நரிக்குறவர்(பூம்புமாட்டுக்காரர்) குடும்பங்களுக்கு கடந்த 2 முறையாக வழங்கிய வீட்டுமனை பட்டா தகுதி நீக்கம் செய்யப்பட்டதை, மீண்டும் வீட்டுமனைப் பட்டா வழங்க கோருதல். மேலகரம், குட்டக்கரை, வண்டிமேடு ஆகிய கிராம சுடுகாட்டிற்கு தண்ணீர் வசதி, எரிமேடை, சுற்றுச்சுவர் அமைக்க கோருதல். ராதாபுரம் ஏரிக்கரையின் மீது மின்விளக்கு அமைக்க கோருதல். ராதாபுரம் இந்து மக்களின் சுடுகாட்டிற்கு தண்ணீர் வசதி, எரிமேடை, சுற்றுச்சுவர் அமைக்க கோருதல், இராதாபுரம் இஸ்லாமிய மக்களின் சுடுகாட்டிற்கு தண்ணீர் வசதி, எரிமேடை, சுற்றுச்சுவர் அமைக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ராதாபுரம் ஊராட்சி, மேலகரம் முதல் தண்டராம்பட்டு மெயின் சாலையில் உள்ள தாழனோடை, குட்டக்கரை ஆகிய கிராமங்களுக்கு சாலை அமைக்க கோரிய கோரிக்கைக்கு ஆணைகள் இன்று நடைபெறுகிற நிகழ்வில் வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் குடிசை வீடுகள் இல்லாத நிலையை மாற்றவேண்டும் என கருதி கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் 3 லட்சம் வீடுகளை கட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 1 லட்சம் வீடுகள் கட்ட நிதி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் அதைபோன்று வீடற்ற குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அரசின் சார்பாக வழங்குகிற அதிகாரம் மாவட்ட ஆட்சியரால் ஆணைகளை பிறப்பித்து வழங்குவார்கள். மேலும் வீடுகள் வழங்குவதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக இக்குழு செயல்படுகிறது. ஆகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் ஏதேனும் முறைகேடுகள் மூலமாக தகுதியில்லாத நபருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு தவறான பயனாளிக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் என்னிடத்தில் புகார் அளித்தால் மாவட்ட ஆட்சியர் மூலம் அதற்கான ஆணைகள் ரத்து செய்யப்படும்.
மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு கையூட்டு பெற்றால் அரசாங்கத்தின் சார்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தாழனோடை, அகரத்திற்கு பேருந்து வேண்டுமென்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலை, கீழ்சிறுபாக்கம், தண்ணீர்பந்தல், சே.கூடலூர், தாழனோடை, அகரம், ராதாபுரம், தண்டராம்பட்டு என்ற வழியில் பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஆட்சி நடத்துகிற முதல்வரின் திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று.
இவ்வாறு பொதுப்பணித்துறை அமைச்சர் பேசினார்.
கிராம சபைக் கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பாக 21 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, நத்தம் சிட்டா, உட்பிரிவு பட்டா மாற்றம், பட்டா மாற்றம், வகுப்பு சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 28 பயனாளிகளுக்கு ரூபாய் 18 இலட்சத்து 60 ஆயிரத்து 700 மதிப்பீட்டில் நவீன செயற்கை கால், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 1 சுய உதவிக்குழுவுக்கு ரூபாய் 10 லட்சம் மற்றும் 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் என 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 11 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிக்கான ஆணைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நொச்சி, ஆடதோடா கன்றுகள் மற்றும் வேளாண் கருவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு வேளாண் இடுப்பொருட்களையும் பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, திருவண்ணாமலையில் மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.