கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய், வைரஸ், பாக்டீரியா, பூச்சை ஆகிய தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள், பின்னர் இரண்டு நுரையீரல்களும் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.
சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தி வரும் சில கிருமிகள் ரத்த ஓட்டத்தை பாதித்துள்ளதாகவும் அதன் பக்க விளைவாக உடல் உறுப்புகளின் செயல்திறனை குறைத்து மரணத்தை ஏற்படுத்தும் செப்சிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ள வாடிகன் தேவாலயம், அதிக ஆக்சிஜன் தேவைப்படுவதால் செயற்கை சுவாசமும் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ரத்த மாற்று சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
போப் பிரான்சிஸை பொறுத்தவரை, 2013ம் ஆண்டு 16வது போப் பெனடிக்ட் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டவர். தனது 21ம் வயதிலேயே pleurisy என்ற அழற்சியால் பாதிக்கப்பட்ட போப்பிற்கு அப்போதே நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், நாள்பட்ட நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவர், 2023 மார்ச்சில் தொடந்து மாதம் 3 நாட்கள் உள்பட தனது வாழ்நாள் முழுவதும் பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவரது உடல்நிலை குறித்து, வாடிகன் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் குணமடைய கத்தோலிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.