ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நாளை தொடங்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது உக்ரைன் உடனான போரால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை புதின் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மாஸ்கோவிற்கு வரும்படி டிரம்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இரு தலைவர்களும் சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார். அதைத் தொடர்ந்து டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெலன்ஸ்கியும், புதினைப் போலவே, அமைதியை உருவாக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் இறப்பதை என்னால் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஜெர்மனியின் முனிச் நகரில் இன்று (14ம் தேதி) அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்படும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.