அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வீட்டுமனை பட்டா, மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
இவ்விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி (செய்யாறு), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது :-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதி வாரியாக திருவண்ணாமலையில் 865 பயனாளிகளுக்கும், கீழ்பென்னாத்தூரில் 1,242 பயனாளிகளுக்கும், செங்கத்தில் 1,182 பயனாளிகளுக்கும், கலசபாக்கத்தில் 1,032 பயனாளிகளுக்கும், போளூரில் 1,457 பயனாளிகளுக்கும், ஆரணியில் 1,271 பயணிகளுக்கும், செய்யாரில் 1,530 பயணிகளுக்கும், வந்தவாசியில் 1,437 பயனாளிகளுக்கும் மொத்தம் 10,016 பயனாளிகளுக்கு ரூ.72 கோடியே 74 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் வீட்டுமனை பட்டாவிற்கு ஆணை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 11 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர மோட்டார் வாகனத்தையும், பள்ளி கல்விதுறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பொறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 9,862 மாணவர்களுக்கு, 11,769 மாணவிகளுக்கு ஆக மொத்தம் 21.631 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சி வரலாறு சிறப்புமிக்க நிகழ்வு, கி.பி 1,002 சோழப் பேரரசன் இராஜராஜ சோழன் ஆட்சியில் தான் முதல் முறையாக நிலங்கள் அளந்துக் கணக்கிடப்பட்டன. நிலங்களை அளந்து உழவர்களுக்குப் பட்டயங்கள் வழங்கப்பட்டன. மதுரை நாயக்கர்கள் ஆட்சியில் கிராமங்களில் வரி வசூல் செய்ய மணியக்காரர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது “பட்டயம்” என்பதை ஆங்கிலேயருக்கு சரியாக உச்சரிக்க வராததால் “பட்டா” என்ற வார்த்தை வந்தது. 1,800 ஆம் ஆண்டில் நிலங்களைப் பதிவு செய்வது குறித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. நிலம் என்பது செல்வத்தின் தாய், உழைப்பு அதன் தந்தை என்று பொருளாதார அறிஞர் ”வில்லியம் பெட்டி” கூறினார். இயற்கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும் சேரும் பொழுதுதான் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பிறக்கிறது. செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் விளங்குகிறது.
1,971 குடியிருப்போர் மனையை குடியிருப்போருக்கே சொந்தம் என சட்டம் செய்தவர் கலைஞர். 1972 நகர் பகுதிகளில் நடுத்தர மக்களுக்கு சொந்த வீடுகள் கட்ட நகரப் பகுதியில் புதிய குடியிருப்புக்களை உருவாக்கியவர் கலைஞர். 1972 ஏழை, எளிய மக்கள் வாழ குடிசை மாற்று வாரியம் கொண்டு வந்தவர் கலைஞர். 15.02.1974 இந்தியாவிலேயே முதன் முறையாக ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகம் தொடங்கப்பட்டு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டி தந்தவர் கலைஞர்.
மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருக்க இடம். தமிழர்கள் இருப்பிடம் என்கிற அடிப்படைத் தேவையை எப்போதும் உணர்வுப் பூர்வமாகப் பார்ப்பவர்கள். கால் காணி நிலத்தைக் கூட பாட்டன் சொத்து, அப்பன் சொத்தை அடுத்தவர்களுக்கு விற்று விடாமல் எவ்வளவு பண நெருக்கடி வந்தாலும் கையில் வைத்திருப்பது நம் இயல்பு. மக்களின் நாடித் துடிப்பினை நன்கு அறிந்த அரசு இந்த அரசு, அதனால் தான் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தை கட்டிக் கொள்ள நிலம் வழங்கி உதவுகிறது இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, வருவாய் கோட்டாட்சியர்கள். ஆர்.மந்தாகினி திருவண்ணாமலை, தனலட்சுமி ஆரணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி திருவண்ணாமலை, தமயந்தி ஏழுமலை துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை ஒன்றிய குழு துணை தலைவர் ரமணன், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், திருவண்ணாமலை நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.