கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் நிலையத்தில் நேற்று நடைபெற்ற வள்ளலாரின் 202-ம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் விழாவில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சன்மார்க்க கொடியினை ஏற்றி வைத்து வள்ளலார் நூலினை வெளியிட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
விழாவிற்கு இந்து சமய அறநிலைத்துறையின் இயக்குனர் ஸ்ரீதரன், மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்ய செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது,
திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் புகழுக்கு, பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நற்செயல்கள் செய்துள்ளது. சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதிக்கு வள்ளலார் நகர் என்று பெயர் சூட்டியதோடு, அந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கும் அவர் பெயரை சுற்றி பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை ஏற்படுத்துவேன் என அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி ரூபாய் 99.90 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழக முதலமைச்சர் திருஅருள் பிரகாச வள்ளலார் பிறந்த அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் தனிப்பெரும் கருணை நாள் என கடைபிடிக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். மேலும் வள்ளலார் தர்மச்சாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கம் வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கம். ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு என மூன்று நிகழ்வுகளையும் இணைந்து அவரது அவதார ஆண்டான 2022 முதல் 2023 ஆம் ஆண்டு 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா வாக கொண்டாட உத்தரவிட்டதோடு அதற்கென 14 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்தார்கள்.
வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல் நிகழ்ச்சியாக 2022-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு வள்ளலார் 200 இலட்சினை தபால் உரை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு ரூபாய் 3.25 கோடி மதிப்பீட்டில் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டதோடு தொடர் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
2023-ம் ஆண்டு அக்டோபர் ஐந்து அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இரண்டு தொடர் நிகழ்வினை நிறைவு விழாவில் முதலமைச்சர் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்கான அரசாணையை வழங்கியதோடு வள்ளலார் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் அன்னதானத்தை தொடங்கி வைத்து முப்பெரும் விழாவாக சிறப்பாக நடத்திட்ட சிறப்பு குழுவினரை பாராட்டி சிறப்பித்தார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன் அறங்காவலர் குழு தலைவர் அழகானந்தம் மற்றும் அறங்காவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.