நுகர்வோர் உரிமைகள்
நுகர்வோரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் உரிமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவை குறைபாடு, பொருட்களின் தயாரிப்பில் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதில், நுகர்வோர் குறைதீர் மன்றங்களுக்கும் குறிப்பிட்ட பங்கு இருந்து வருகிறது. விழிப்புணர்வு அதிகமாகி வருவதால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
ஆரோக்கியமான சமுதாயம் உருவாக நுகர்வோர் பாதுகாப்பு மிகவும் அவசியம். அதனால்தான் கடந்த 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. ஆரோக்கியமான சமுதாயம் உருவாக நுகர்வோர் பாதுகாப்பு மிகவும் அவசியம். அதனால்தான் கடந்த 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தை பயன்படுத்தி நுகர்வோர் தங்களுக்கான பாதுகாப்பு, தகவல் பெறுதல், விருப்பத்தினை தேர்வு செய்தல், அடிப்படை தேவை பெறுதல், நுகர்வோர் கல்வி பெறுதல், கேட்டறிதல், குறைதீர்ப்பு வலியுறுத்தல் ஆகிய உரிமைகளை பெற முடியும்.
குறைதீர் நீதிமன்றங்கள்
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நுகர்வோர்கள் தங்களது குறைகளை புகாராக தெரிவித்து நிவாரணம் பெறலாம். ஒரு நுகர்வோர் கோரும் ஈட்டுத் தொகை ரூ.20 லட்சத்துக்குள் இருந்தால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்கோ ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.1 கோடிக்குள் இருந்தால் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலோ புகார் பதிவு செய்யலாம். அதற்கும் மேல் தொகை சென்றால் டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்யலாம். எந்த நிலையிலும் நியாயம் கிடைக்காவிடில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டை அணுகி தங்களது உரிமைகளை மீட்டெடுக்கலாம்.
அலட்சியம் வேண்டாம்
நுகர்வோர்கள் தங்களது உரிமைகளை பெறுவதற்கு, பொருட்களையோ, சேவையையோ பெறும் ஒருவர், யாரிடம் இருந்து என்ன பெறுகிறோம் என்பதற்கான ஒப்புகை கடிதம், அறிவிப்பு ரசீது, பெற்றுக் கொண்டதற்கான ரசீது ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் ஏமாறும் நுகர்வோர் எல்லோரும் தங்களது உரிமைக்காக மாவட்ட, மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்களுக்கு வருகிறார்களா என்றால் இல்லை. அதுவே ஏமாற்றுவோருக்கு பலமாகிவிடுகிறது. இந்த சிறிய விஷயத்துக்காக குறைதீர் மன்றங்கள், கோர்ட்டுகளுக்கு செல்வதா என்று ஒவ்வொருவரும் அலட்சியம் காட்டுவது நிறுத்தப்பட வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பு மசோதா
நுகர்வோருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா-2017 என்ற புதிய திருத்த மசோதாவை தயாரித்து உள்ளது. இந்த மசோதா, நுகர்வோருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதுடன், இதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒன்றை அமைக்கவும் வழிவகுக்கிறது.