சி.சி.டி.வி. காட்சி மூலம் திருடர்களுக்கு வலை
ஆம்பூர் அருகே மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டிச் சென்றவர்களை சி.சி.டி.வி. பதிவு காட்சி மூலம் வலை வீசித்தேடி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் வீரராகவலு மனைவி ராமாஞ்சுலு அம்மாள் (வயது 65). ராமாஞ்சுலு அம்மாள் வீட்டின் தனியாக வசித்து வந்தார். மேலும் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆட்களை வைத்து பயிர்செய்து பராமரிப்பு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் பிற்பகல் ராமாஞ்சுலு அம்மாள் வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு சென்று மீண்டும் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்ற பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதிலிருந்த 15 பவுன், நகை வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 82 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, ராமாஞ்சுலு அம்மாள் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
திருட்டு குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வீதியில் பை ஒன்றுடன் முகத்தை மூடியவாறு அவசர அவசரமாக நபர் ஒருவர் செல்லும் சி.சி.டி.வி. பதிவு காட்சியை கைப்பற்நி அதன் மூலம் திருடனை வலை வீசித்தேடி வருகின்றனர்.