ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ் ஆர்.ஷர்மிளா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார்.
ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியும் காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, தெலங்கானா பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தார். இதனிடையே, காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவது அல்லது தனது ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை இணைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தைத் தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் தலைமையைச் சந்தித்து முக்கியமான அரசியல் அறிவிப்பை வெளியிடுவோம்’ என்று ஷர்மிளா தெரிவித்தார்.
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சித் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார். ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் ஷர்மிளா பேசுகையில், ‘தெலுங்கு மொழி பேசும் மக்களின் தொலைநோக்குத் தலைவராக திகழ்ந்த எனது தந்தை, தனது வாழ்க்கையை காங்கிரஸுக்காக அர்ப்பணித்தார். அவரது வழியைப் பின்பற்றி காங்கிரஸில் ஓர் அங்கமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராகப் பார்க்க வேண்டும் என்பது எனது தந்தையின் கனவாக இருந்தது. அதை நிறைவேற்றும் கடமையில் நானும் ஓர் அங்கமாக இருக்கப் போகிறேன்’ என்றார்.