கேளூர் அடுத்த தேப்பனந்தல் கிராமத்தில் நடைபெற்ற வார சந்தையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு காளை மற்றும் பசுமாடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வாரச் சந்தைகளில் மிகவும் பிரபலமானது ஆரணி அடுத்த கேளூர் அருகே தேப்பனந்தல் கிராமத்தில் நடைபெறும் வாரச்சந்தை. சுமார் 70 ஆண்டுகள் பழமையானது. சனிக்கிழமை தோறும் நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு காளை மாடுகள், பசுக்கள் வரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கேளூர் அடுத்த தேப்பனந்தல் கிராமத்தில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு கால்நடைகளின் வருகை கணிசமாக இருந்தன.
திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காளை மாடுகள், கன்றுகளுடன் பசுக்கள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஜெர்சி மற்றும் நாட்டு மாடுகள் வந்தன. மாடுகளை வாங்க தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்தனர். ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை விலை உள்ள மாடுகள் விற்பனைக்கு வந்தன.