ஐந்திற்கும் மேற்பட்ட கிராமத்தையே திரும்பி பார்க்க வைத்த 500 – போலீசாரின் அதிரடி அணிவகுப்பு
ஒரு புறம் போலீசாரின் சைரன் ஒலிக்க மறுபுறம் காவல் துணை கண்காணிப்பாளரின் மிடுக்கான குரலில் நடைபெற்ற அணிவகுப்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வீரளூர் கிராமத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசாரின் பிரம்மாண்ட அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மஞ்சுவிரட்டு, காளை மாடு விடுதல் மற்றும் எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் அவ்வப்போதும் காளை மாடு விடுதல் மற்றும் எருது விடும் நிகழ்ச்சி உள்ளிட்டவைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அதனை கண்டு கொள்ளாத கிராமத்தினர் மற்றும் காளை விடும் நிகழ்ச்சி நடத்தும் குழுவினருடனும் ஆலோசனை கூட்டம் மற்றும் பேச்சு வார்த்தைகள் காவல்துறை சார்பில் நடத்தியும் எவ்வித பலனும் அளிக்கவில்லை இருந்தபோதிலும் தொடர்ச்சியாக இவ்வாறு காளை மாடு விடும் போட்டிகளை மார்கழி மாதம் மற்றும் பொங்கலை முன்னிட்டு தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
போளூர் அடுத்த வீரளூர் ,மேல்சோழங்குப்பம், நவாப்பாளையம், ஆதமங்கலம், புதூர் ஆகிய கிராமங்களில் எருது விடும் விழா நடைபெறுவதை முன்னிட்டு கிராமங்களில் பாதுகாப்பு குறித்து எந்தவித அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் காவல்துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி, தலைமையில் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்று பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
உடன் போளூர் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், கடலாடி உதவி ஆய்வாளர் மகாலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.