தேசிய அளவில் வூசு போட்டிக்குத் தேர்வான டிஜெஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியின் கல்வி, போட்டிக்கு செல்லும் செலவை டிஜெஎஸ் கல்விக் குழுமம் ஏற்றுள்ளது. 2024 – 2025 கல்வி ஆண்டிற்கான இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் எஸ்.ஜி.எஃப்.ஐ நடத்தும் மாநில அளவிலான வூசு போட்டி நாகப்பட்டினம் எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு டி பிரிவில் பயிலும் மாணவி வி.சாந்தபிரியதர்ஷினி முதலிடம் பெற்று தேசிய அளவில் தேர்ச்சி பெற்றார்.
தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி வி.சாந்தபிரியதர்ஷினி டி.ஜெ.எஸ் கல்விக்குழுமத்தின் தலைவரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கல்வி நெறி காவலர் டி.ஜெ.கோவிந்தராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது இம்மாணவி தேசிய அளவிலான போட்டிக்கு சென்று வரும் செலவையும், கல்விச் செலவையும் டி.ஜெ.எஸ்.கல்விக் குழுமம் ஏற்றுக்கொள்ளும் என்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ கூறினார்.
கல்விக் குழுமத்தின் மேலாண்மை இயக்குனரும் செயலாளருமான டி.ஜெ. ஆறுமுகம், துணைத்தலைவர் டி.ஜெ.தேசமுத்து, டி.ஜெ.எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஏ.பழனி, இயக்குனர்கள் ஆ.விஜயகுமார், ஆ.கபிலன், தே.தினேஷ், டி. ஜெ.எஸ்.ஜி. தமிழரசன், உறுப்பினர்கள் சொ.சண்முகசுந்தரம், ரா.ஜெயக்குமார், ஆ.ராஜேஷ், கல்விக் குழுமத்தின் நிர்வாக அலுவலர் செ.ஏழுமலை, பள்ளியின் முதல்வர் பா.ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி வி.சாந்த பிரியதர்ஷினியின் தந்தையும், லாரி டிரைவருமான வெங்கடேசன், தாய்சித்ரா ஆகியோர் டி.ஜெ.எஸ் கல்விக் குழுமத்துக்கு தங்களது சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தேசிய அளவிலான போட்டி நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு, பகவதி நகர்,எம்.ஏ.ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.