ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அடுத்த திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன் கூறியதாவது :-
மாணவர்களிடையே படிக்கின்ற பழக்கத்தை உருவாக்க வேண்டும்:
கிராமங்கள் தோறும் அம்பேத்கர் சிலைகள் அமைப்பதை விட அவர் பெயரில் ஒரு படிப்பகத்தை கட்டி எழுப்ப வேண்டும், அதுதான் அடுத்த தலைமுறைக்கு செய்யக் கூடிய பெரும் செயல். மாணவர்களுக்கு படிக்கின்ற பழக்கத்தை உருவாக்க வேண்டும். படிப்பது ஒரு கலை. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக பாஜக இருந்தது, சாதி ஒழிப்பு, சகோதரத்துவம், சமத்துவம், இடஒதுக்கீட்டை வெளிப்படையாக ஆதரிக்காத கட்சி ஒன்று இந்தியாவில் உண்டு என்றால் அது பிஜேபி தான்
காவல் துறையை கண்டித்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்:
தமிழகத்தில் நடைபெற்ற வேங்கை வயல், கள்ளக்குறிச்சி மேல் பாதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளாக இருந்தாலும் திமுக அரசின் தமிழக காவல் துறையை கண்டித்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அப்போதெல்லாம் அதிமுக போராட்டங்களை நடத்த வேண்டியது தானே. திமுகவோடு தொடர்ந்து நாம் பயணிக்கிறோம் என்பதையே பலர் கேலி பேசுகிறார்கள்.
விஜய் புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணித்தேன்:
புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற நடிகர் விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்த போது, அது ஒரு தவறான யூகத்தை கொடுத்து விடக் கூடாது. நாம் இருக்கிற அணியில் தொடர வேண்டும் அப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது அதன் மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாஜகவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும் என்பதையெல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தேன்.
எனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த அதிமுக கதவை நான் மூடியது போன்று விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடினேன். ஆட்சியில் பங்கு. துணை முதல்வர் பதவி என்ற ஆசை வார்த்தைகளால் என்னை வீழ்த்தி விட முடியாது. பாஜக இருக்கும் கூட்டணியிலும் சேர மாட்டேன், வேறு எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம், எங்களுக்கு பதவி முக்கியமல்ல, கொள்கைதான் முக்கியம். நான் கொள்கையுடையவன்” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.