கடந்த 1956ம் ஆண்டில் நடந்த மொழிவழி மாநில பிரிவினையின் போது, தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை கேரளாவுடன் இணைத்தது தான் பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம்.
கேரளாவில் உள்ள பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களில் தமிழர்களே அதிகம் வாழ்ந்தனர். மொழிவழி அடிப்படையில் தான் 1956ல் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் அப்போது தமிழர்கள் வாழ்ந்த பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களையும் கேரளா தந்திரமாக கைப்பற்றிக் கொண்டது.
தேவிகுளம் பீர்மேடு விஷயத்தில் மலையாளிகள் இந்த அளவிற்கு பிடிவாதம் காட்டுவதற்கான பின்னணியில், வேறொரு கிளைக் கதையும் இருக்கிறது. கேரளாவின் இரண்டு பிரதான நதிகள் பம்பா மற்றும் பெரியாறு. இதில் பெரியாறு பெரிய அளவிற்கு விவசாயத்திற்காக பயன்படாவிட்டால் கூட, கேரள மாநிலத்திற்கான மின் தேவையில் 42 விழுக்காடை அதுதான் பூர்த்தி செய்கிறது.
ஆனால் பம்பை அப்படி அல்ல, கேரளாவில் விவசாயம் செழித்த குட்டநாடு பகுதியினுடைய ஜீவாதாரமே இந்த பம்பை தான். மேலாக மத்திய திருவிதாங்கூரின் நீர் வளத்திற்கு காரணமாக விளங்குவது இந்த பம்பை நதிதான்.
பழைய பீர்மேடு தாலுகாவில் புளிச்ச மலையில் உற்பத்தியாகும் இந்தப் பம்பா நதி, ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே ஓடி, வேம்பநாட்டு காயலில் சென்று கலக்கிறது.
இதைவிட இன்னொரு கொடுமை இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது… கேரளாவிற்கும்- தமிழகத்திற்குமிடையிலான எல்லையின் நீளம் 822 கிலோ மீட்டர்கள். அதாவது நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை சரணாலயத்தில் தொடங்கும் எல்லை… கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை (சதுரகிரி), விருதுநகர், தென்காசி வழியாக பயணித்து குமரி மாவட்டத்தின் கொல்லங்கோட்டில் முடிவடைகிறது.
இத்தனை நீளமான எல்லையில் முறையாக அளக்கப்பட்ட பகுதிகள் வெறும் 203 கிலோ மீட்டர்கள் மட்டுமே…அப்படியானால் மொழிவழி பிரிவினை கமிட்டி போகிற போக்கில் கையை காட்டிவிட்டு சென்றது தான், நமக்கும் கேரளாவிற்குமான எல்லையாக இதுவரை இருந்து வருகிறது.
அளவீடு செய்யப்படாமலேயே இரண்டு மாநில எல்கைகளும் இதுவரை நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
21- 11- 1955 ஆம் ஆண்டு, சென்னை மாகாண சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான எஸ். தினகரசாமி தேவரின் வாதம் புறக்கணிக்கப்பட முடியாத ஒன்று.
‘‘தேவிகுளத்தில் 90 விழுக்காடு தமிழர்களும், பீர்மேட்டில் 51 விழுக்காடு தமிழர்களும் வாழ்ந்து வரும் நிலையில்…எந்த அடிப்படையில் மேற்கண்ட இரண்டு தாலுகாக்களையும், கேரளாவோடு இணைப்பதற்கு மொழிவழி பிரிவினை கமிட்டி சம்மதம் தெரிவித்திருக்கிறது என்பதாகும்”
ஆனால் எஸ். தினகரசாமி தேவர் இந்த வாதத்தை, அன்றைக்கு சென்னை மாகாண சட்டமன்றத்தில் இருந்த மலையாள உறுப்பினர்கள் எவரும் மறுக்கவில்லை என்பதை, அன்றைய சட்டமன்றக் குறிப்பேடுகளிலேயே நாம் பார்த்துக்கொள்ள முடியும்.
தேவிகுளம் தாலுகாவில் 1931ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழர்கள் எண்ணிக்கை- 51,730 பேர். மலையாளிகள் எண்ணிக்கை-3,834 மட்டுமே. இதுவே 1941 ல் தமிழர்களின் எண்ணிக்கை-53,394 பேர். மலையாளிகளின் எண்ணிக்கை- 8,282 பேர். இதுவே 1951ஆம் ஆண்டு தமிழர்களின் எண்ணிக்கை-62,130 பேர். ஆனால் அதே ஆண்டு மலையாளிகளின் எண்ணிக்கை 16,050 பேர்.
அதாவது 51 ஆயிரத்து 730 பேர், 62 ஆயிரத்து 130 பேர் ஆக உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் வெறும் 3,834 பேர், 16,050 பேராக உயர்ந்திருக்கிறார்கள். இந்தக் கணக்கில் ஏதாவது நியாயம் இருக்கிறதா…? பிராய்லர் கோழிகளைப் போல தங்கள் எண்ணிக்கையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தேவிகுளம் தாலுகாவில் உயர்த்திக் கொண்ட இவர்கள்… இன்று மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட்டார்கள்…
ஆனால் 1931 ஆம் ஆண்டு அரை இலட்சத்திற்கும் மேல் வாழ்ந்த தமிழர்கள், இன்று அந்த மண்ணுக்கு அந்நியமாகிப் போனார்கள். தமிழர்கள் வாழும் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்கள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் முல்லைப்பெரியாறு அணை முழுமையாக தமிழ்நாட்டிற்குள் வந்திருக்கும்.
இப்படி ஒரு சிக்கலே உருவாகியிருக்காது. இப்போது பெரியாறு அணை சிக்கலுக்கு அடிப்படை காரணம் அன்று தெளிவாக முடிவு செய்யாமல் எல்லைகளை பிரித்தது மட்டுமே. ஆனால் இதுபற்றி முழுவிவரம் தெரிந்தும் தமிழகம் பிரிவினை பற்றி எப்போதும் பேசவில்லை. தமிழகம் இழந்த பகுதிகளை தாருங்கள் என எந்த சூழலிலும் கேரளாவிடம் கேட்கவில்லை.
பெரியாறு அணை பலமாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பெரியாறு அணையில் பலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து விட்டன. பேபி அணையினை பலப்படுத்த அனுமதி தாருங்கள் என தான் தமிழக அரசு கேட்கிறது. இதற்கு அனுமதிக்க கேரளா மறுக்கிறது.
இப்போது என்ன தான் தமிழக முதல்வர் அன்பு முகம் காட்டினாலும், கேரள முதல்வர் பிரனாய் விஜயன் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. கேரளா தமிழகத்தில் முன்பு மருத்துவக் கழிவுகளை கொட்டியது. கோர்ட்டே அதிரடி காட்டிய பின்னர் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை நிறுத்தி விட்டு.. இப்போது கேரளாவில் உள்ள தெருநாய்களை கொண்டு வந்து தமிழக எல்லைக்குள் குவிக்கிறது.
தமிழகத்தில் இருந்து தினமும் பலநுாறு டன்கள் கனிமவளம் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. கேரள முதல்வரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அன்பும், மரியாதையும், நட்பும் பாராட்டி வருகிறார். ஆனால் கேரள முதல்வரோ தமிழக முதல்வர் மீது அதே அளவு அன்பும், மரியாதையும் காட்டுவது போல் நடித்து விட்டு, தமிழகத்திற்கு எதிரான விஷயங்களை தெளிவாக செய்து வருகிறார்.
என்ன தான் கேரள முதல்வர் பிரனாய் விஜயன் முரண்டு பிடித்தாலும், தமிழக முதல்வர் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அவருடன் நட்பு பேணுவதோடு… தமிழகத்தின் உரிமை எள்ளளவும் பறிபோய் விடாத அளவில் மிக தெளிவான உயரிய நுட்பங்கள் நிறைந்த சட்ட நடவடிக்கைகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.
முல்லைப்பெரியாறு அணையினை ஆய்வு செய்த இருமாநில பொறியாளர்கள் அடங்கிய புதிய கண்காணிப்புக்குழு சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதில் தமிழகத்தின் உரிமையும், பெரியாறு அணையின் நிலைத்தன்மையும் உறுதியாக பாதுகாக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
-மா.பாண்டியராஜ்