துணைவேந்தர்களுக்கான மாநாடு மாநில அரசுடனான அதிகாரப்போட்டி இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
வரும் ஏப்ரல் 25, 25ஆம் தேதிகளில் உதகையில் துணைவேந்தர்களுக்கான மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்த உள்ளார். இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி அழைத்திருந்தார்.
சட்ட மசோதாக்களில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், துணைவேந்தர்கள் மாநாடு, மாநில அரசுக்கு போட்டியாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை வேந்தர்களுக்கான மாநாடு கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருவதாகவும், இந்த மாநாட்டிற்கான பணிகளும் கடந்த ஜனவரி மாதமே தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சி, கல்விக்கான திட்டமிடுதல் போன்றவற்றிற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும், இந்த மாநாட்டை மாநில அரசுக்கு எதிரான அதிகார போட்டியாக நடத்தப்படுவதாகவும் சமீபத்தில் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்புடன் முடிச்சு போட்டு சிலர் தவறான தகவல்களை பரப்புவதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.