டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை (23ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. டாஸ்மாக் தரப்பில் அமலாக்கத்துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை எனவும் வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் 2007ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை முறைகேடு என்று கூறப்படும் நிலையில், தற்போதுதான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன் எனவும் அரசுத்தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
தொடர்ந்து, இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது என்றும், நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியதாகவும் அரசுத்தரப்பில் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத் துறை தரப்பில், மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததாகவும், முறைகேடு நடந்திருப்பதாகக் கருதினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம் எனவும் வாதிடப்பட்டது.
டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாகவும், சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, டாஸ்மாக் தரப்பில், அமலாக்கத்துறையினர் சட்டத்தை மதிக்காமல் தங்களது விருப்பத்திற்கு செயல்படக்கூடாது என்றும் சில அதிகாரிகளை அமலாக்கத்துறை தூங்கவிடாதது மனித உரிமை மீறிய செயல் என வாதிடப்பட்டது.
மேலும், அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை என்றும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து நாளை (23ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.