தமிழகத்தின் நலன் கருதி வைகோவிற்கு மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என துரை வைகோ தி.மு.க.,விற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கோவில்பட்டியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பேசியதாவது:-
தி.மு.கவில் 30 ஆண்டுகள், மதிமுகவில் 31 ஆண்டுகள் என 61 ஆண்டுகள் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருக்கிறேன். என்னுடைய அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியே அனுப்பிய பங்கு ம.தி.மு.கவுக்குத் தான் உண்டு. விவசாயிகள், மீனவர்கள், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக உண்ணாவிரதம், மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி இந்த ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன்.
நிரந்தரமாக மூட தீர்ப்பு வந்தது. இந்த ஆலையை வைத்து வருமானம் தேடிய லாரி அதிபர்கள் நாமக்கல் அருகே ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரே குரலாக பயங்கரவாதிகளை அகற்ற துணை புரிய வேண்டும். நாட்டில் மதத்தின் பெயரால் மோதல், கலவரம் ஏற்படக்கூடாது.
அழிந்து போன குடும்பங்கள்:
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தால் அழிந்து போன விவசாய குடும்பங்கள் ஏராளம். இதன் அர்த்தம் அனைவருக்கும் தெரியும். அவ்வளவு ஊதியம் கொடுத்து களை வெட்டுவதற்கு ஆட்களை கூப்பிட முடியாது. அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள். விவசாய நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம். இதற்கு 100 சதவீதம் மதிப்பு வரப்போகிறது. உலகத்தில் உணவு பஞ்சம் வரவுள்ளது. அப்போது விவசாயியைத் தான் எல்லோரும் தேடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் துரை வைகோ எம்.பி. கூறியதாவது:
பல்கலைக் கழக வேந்தராக ஆளுநர் இருந்தாலும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்கள் மனிதநேயத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ம.தி.மு.கவை கடந்து வைகோ சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். 30 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து பேசி உள்ளார். அதில் பல விஷயங்களில் வெற்றியும் அடைந்துள்ளார்.
வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்பதை தமிழகத்தின் குரலாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர ம.தி.மு.கவின் குரலாக பார்க்கக் கூடாது. அரசியலைக் கடந்து வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போவது ம.தி.மு.கவுக்கு மட்டும் அல்ல தமிழகத்துக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது. தி.மு.க தலைமை கண்டிப்பாக பரிசீலிக்கும் என நம்புகிறேன் என்றார்.
-மா.பாண்டியராஜ்