தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணிகளின் பலம் கிட்டத்தட்ட சமம் என்ற நிலைக்கு வந்து விட்டதால்… யார் வீழப்போகிறார்கள்? யார் வாழப்போகிறார்கள்? என்ற துருப்புச்சீட்டு விஜய்யிடம் சென்று விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விஜய்க்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும். எத்தனை சதவீதம் ஓட்டு கிடைக்கும். யார்? யாரின் ஓட்டுக்களை விஜய் பறிப்பார் என்ற பரபரப்பான விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. இப்போதைய நிலையில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியும், தி.மு.க., தலைமையிலான கூட்டணிகளும் கிட்டத்தட்ட சமபலத்தில் உள்ளன. ஆனால் தி.மு.க.,வுக்கு இருக்கும் பெரிய சிக்கல்… அந்த கட்சிக்கு எதிரான அதிருப்தி… அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
பொன்முடியின் உளறல் பேச்சு
போதாக்குறைக்கு பொன்முடியும் தனது பங்குக்கு தி.மு.க.,வுக்கு எதிராக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ சில இடங்களில் மியூட் ஆனாலும்… பல வீடியோக்களில் மியூட் ஆகாமலேயே சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. தவிர பா.ஜ.க.,வின் ஐ.டி., விங்க் இதனை ஒரு சாதகமாகவே எடுத்து பொன்முடி பேசியது இது தான் என டைப் செய்து வெளியிட்டு வருகின்றனர்.
இதை படித்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கூட கொந்தளிக்கின்றனர். ஒரு மதத்தை இப்படி கொச்சையாகவா பேசுவாங்க..? என்ன தான் எதிர்ப்பு மனநிலை இருந்தாலும்… இவ்வளவு கேவலமாக பேசியது தவறு என மாற்று மதத்தவர்களே கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் பொன்முடியின் பதவியையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீ பிடித்து எரிகிறது. இந்த நெருப்பை எப்படி முதல்வர் அணைக்கப்போகிறார் என தெரியவில்லை. நிச்சயம் இந்த வார்த்தை பெண்கள் மத்தியில் கடுமையாக ஊடுறுவி அவர்களின் மனநிலைகளில் கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் மாற்றமில்லை. இதேபோல் தி.மு.க.,வின் பலகீனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேசமயம் வக்பு போர்டு சட்டவிதிகள் திருத்த சட்டம், பா.ஜ.க., உடனான கூட்டணி என அ.தி.மு.க.,வும் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை இழந்து தான் நிற்கிறது. அ.தி.மு.க.,- பா.ஜ.க., கூட்டணியும் முழு பலத்தோடு நிற்கிறது என்று கூறி விடவே முடியாது. இப்போது என்ன சிக்கல் என்றால்… அ.தி.மு.க.,- பா.ஜ.க., கூட்டணிக்கு எதிரான ஓட்டுகள் நிச்சயம் தி.மு.க., அணிக்கு போகும் என உறுதியாக கூறலாம்.
விஜய் உடைக்கும் ஓட்டுகள்
ஆனால் தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் யாருக்கு போகும் என்பதை கணிப்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. குறிப்பாக விஜய்க்கு யார்? யாரெல்லாம் ஓட்டளிப்பார்கள் என்பதை ஓரளவு யூகிக்கலாம். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை நிச்சயம் விஜய் உடைப்பார்.
அதேபோல் எஸ்.டி., வகுப்பினரின் ஓட்டுக்களையும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களையும் விஜய் பெரும் அளவில் கைப்பற்றுவார். நியூ கம்மர்ஸ் என்பார்களே… அதாவது புதிய வாக்காளர்கள், முதன் முறை வாக்காளர்கள்… இவர்களின் பெரும்பாலான ஓட்டுக்களையும் விஜய் அள்ளி விடுவார் என்பதில் அதில் சந்தேகம் இல்லை.
இப்படி கணக்கிடும் போது… நிச்சயம் விஜய் வாங்கும் ஓட்டுகள் தி.மு.க., அணி, அ.தி.மு.க., அணி என இருதரப்பிற்குமே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.இந்த இரு முக்கிய அணிகளில் எந்த அணியின் ஓட்டுக்களை விஜய் அதிகம் வாங்கப்போகிறார் என்பதில் தான் இரு அணிகளின் வாழ்வாதாரமே அடங்கி உள்ளது.
அரசியல் மாற்றம்
நிச்சயம் இந்த தேர்தல் முடிந்ததும் புதிய ஆட்சி பொறுப்பேற்கும் போது, அதில் விஜய் இடம் பெற வாய்ப்புகள் இல்லை. தனியாக நிற்பதாக அவர் அறிவித்து விட்ட நிலையில், விஜய் முதல் தேர்தலிலேயே ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு அரசியல் மாற்றத்தை கொண்டு வர மாட்டார்.
ஆனால் அவர் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளால் நிச்சயம் ஆட்சி மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டே தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனை தி.மு.க., அ.தி.மு.க., என இரு அணிகளுமே உணர்ந்து உள்ளன. இதனால் இரு அணிகளுமே இதற்கேற்ப வியூகங்களை வகுக்கத் தொடங்கி உள்ளன.
-மா.பாண்டியராஜ்.