டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வருவதில் நாங்கள் சுணங்க மாட்டோம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி ஆலை சார்ந்த அலுவலகங்களில் நடத்திய அமலாக்கத்துறை சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்த முறைகேட்டுக்கு திமுக அரசு துணை போயுள்ளதாகக் கூறி குற்றம்சாட்டியிருந்த பா.ஜ.க., எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இந்த விவகாரத்தில் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இதனையடுத்து நேற்று பா.ஜ.க.,வினர் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்கின்ற வகையில், காலை முதலே பா.ஜ.க., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
சாலிகிராமத்தில் உள்ள தெலுங்கானா முன்னாள் ஆளுநரும் தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனும் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அதிகாலை முதலே காவல்துறையினர் எனது வீட்டைச் சுற்றி நின்றிருக்கிறார்கள். எவ்வித போலீஸ் அடக்குமுறை இருந்தாலும், திமுக அரசின் டாஸ்மாக் ஊழலை வெளிக்கொணர்வதில் இருந்து பாஜக எவ்விதத்திலும் சுணங்காது. இந்த 1000 கோடி ஆரம்பம் தான். பல லட்சம் கோடிகள் இதில் சுருட்டப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்த அமைச்சர் அதற்காக பெயர்பெற்றவர். இன்று போர் ஆரம்பித்துவிட்டது. தமிழகத்திலுள்ள அத்தனை ஊழல்களையும் வெளிக்கொணர்வோம். பாஜகவினர் ஓயாமல் பாடுபடுவோம்” என தெரிவித்தார்.
பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை டாஸ்மாக் விவகாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்த அதே தொகையை அமலாக்கத்துறையும் சொல்வது எப்படி என அமைச்சர் செந்தில் பாலாஜி எழுப்பி உள்ள கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், “அமலாக்கத்துறை தெரிவித்த கணக்கினை தான் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். ஒருவேளை ஆயிரம் கோடியை காட்டிலும் அதிகமாக ஊழல் நடந்த தொகையை சொல்லவில்லை என்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜி அவ்வாறு குறிப்பிட்டு இருக்கலாம்” எனவும் தெரிவித்தார்.
ஊழல் முறைகேடு செய்வதில் கை தேர்ந்தவரான செந்தில் பாலாஜி கமிஷன் அடித்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார்