தமிழ்நாடு பட்ஜெட்டில் தேவநாகரி குறியீடான ‘₹’க்கு பதிலாக தமிழ் எழுத்து ‘ரூ’ குறியீட்டை பயன்படுத்தியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘₹’க்கு பதிலாக ‘ரூ’ குறியீட்டை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், பட்ஜெட்டிற்கான லச்சினையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், ரூபாயைக் குறிக்கும் தேவநாகரி எழுத்தான ‘₹’ என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ‘ரூ’ எனும் எழுத்தை பயன்படுத்தி லச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
புதியக் கல்விக் கொள்கையும், அதில் இருக்கும் மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என்றும், தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கை தான் நீடிக்கும் என தமிழ்நாடு அரசு வலுவாக சொல்லிவருகிறது. இந்த நிலையில், இந்தி மொழிக்கு அடிப்படையாக இருக்கும் தேவநாகரி குறியீடான ‘₹’ என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ‘ரூ’ என பயன்படுத்தியிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழர் ஒருவர் உருவாக்கி, பாரதம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபாய் சின்னத்தை (₹), தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மாற்றுகிறது. தமிழ்நாடு அரசு மாற்றியுள்ள ரூபாய் குறியீடு திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் உருவாக்கியது” என பதிவிட்டுள்ளார்.