024-25 ம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருளாதாரம், நாட்டிலேயே அதிகப்பட்சமாக 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கோள் காட்டியுள்ளார்.
முதல் இடத்தில் தமிழ்நாடு :
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் படி, 2024-25ம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில், 15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது 9.69 விழுக்காடு அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட முதல் பொருளாதார ஆய்வறிக்கையில், 8 விழுக்காட்டிற்கு மேல் வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 9.69 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், அதிகபட்சமாக சேவைகள் துறை, 12.7 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், குறைந்தபட்சமாக, விவசாயம் மற்றும் கால்நடைகள் துறை 0.15 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இரண்டு மற்றும் மூன்றாவது இடங்கள் :
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நாட்டிலேயே தமிழ்நாடு தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து, 8.21 சதவிகித வளர்ச்சியுடன் 2 ஆவது இடத்தில் ஆந்திராவும், 7.82 விழுக்காடு வளர்ச்சியுடன் ராஜஸ்தான் 3வது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில், இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு இருப்பதாவது :-
‘9.69 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.
அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்!’ எனத் தெரிவித்துள்ளார்.