திருவள்ளூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பெருஞ்சேரி கிராமத்தில், மாவட்ட வருவாய்த் துறை சார்பில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, ஆவடி மற்றும் பூந்தமல்லி தொகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது :-
”திருவள்ளூர் மற்றும் சென்னையை சுற்றி ஏராளமான தொழில் வளாகங்களை உருவாக்கியவர் கலைஞர். முத்தமிழறிஞர் கலைஞர்தான் நவீன தமிழ்நாட்டின் சிற்பி.
அ.தி.மு.க.வின் இருண்ட ஆட்சிக் காலத்தில் பத்தாண்டுகள் முடங்கிக் கிடந்த உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. திராவிட மாடல் அரசின் அக்கறையான நிர்வாகத்தால் அனைத்துத் துறையும் வளர்கிறது – அனைத்து தரப்பு மக்களும் வளர்கின்றனர். அனைத்து துறைகளும், அனைத்து தரப்பு மக்களும் வளருவதால் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் தமிழ்நாட்டில் மாபெரும் சமூகப் புரட்சி ஏற்பட்டு வருகிறது. மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் அளித்து, தன்னம்பிக்கையை உயர்த்தியிருக்கிறது.
திமுக ஆட்சி மீது எந்தக் குறையும் சொல்ல முடியாததால், சிலர் அவதூறு பரப்புகின்றனர். சட்டம் – ஒழுங்கு, நிர்வாகம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகின்றன. தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்தோடு உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைக்க முயற்சிக்கின்றனர்.
நீட் தேர்வு எதிர்ப்பு. மும்மொழித் திட்டம் நிராகரிப்பு, வக்ஃப் சட்டம் எதிர்ப்பு என இந்திய அளவில் ஓங்கிக் குரல் கொடுக்கின்றது திமுக. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படையும் மாநிலங்களை ஒன்று திரட்டி வலுவாக குரல் கொடுக்கும் இயக்கம்தான் திமுக. மாநில உரிமையின் அகில இந்திய முகமாக உள்ளது தி.மு.க. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துத்தான் தமிழ்நாடு போராடுகிறது.
மாநில மக்களின் விருப்பத்தை மதிக்காத, சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை மதிக்காத ஆளுநர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வாங்கியுள்ளோம். தி.மு.க.வோட ‘பவர்’ என்ன என்று தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமில்ல, இந்தியா முழுவதும் எல்லாருக்குமே தெரிந்துள்ளது.
நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு தருவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் சொல்ல முடியவில்லை. இந்தியை திணிக்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் உறுதியளிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என அமித்ஷாவால் பட்டியல் போட முடியுமா? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டோட பிரதிநிதித்துவம் குறையாது என அமித்ஷாவால் வாக்குறுதி கொடுக்க முடியவில்லை.
மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா? என கேட்டது நீங்கள்தானே? 2011-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தது மோடி தானே? ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் நடத்துகின்றனர் என புகார் சொன்னது மோடி தானே? நான் கேட்பது அழுகை இல்லை; அது தமிழ்நாட்டின் உரிமை.
நான் அழுகிறவன் அல்ல. ஊர்ந்து போய் யாரின் காலையும் பிடிப்பவன் அல்ல. உறவுக்குக் கை கொடுப்போம் – உரிமைக்கு குரல் கொடுப்போம் என கலைஞரின் வழித்தடத்தில் பயணிக்கிறேன்.
பா.ஜ.க. அரசு எல்லா வகையிலும் தமிழ்நாட்டிற்கு தடை ஏற்படுத்துகிறது. எப்படியெல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என யோசித்து எல்லா ரூபத்திலும் நெருக்கடி கொடுக்கிறது. மத்திய அரசு கொடுக்கும் குடைச்சல்களை மீறி பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து தரவரிசையிலும் தமிழ்நாடு மீண்டும் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தன் குழந்தைக்கு என்ன தேவை என்று தாய்க்கு மட்டுமே தெரியும். தன் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என டெல்லியில் இருக்கின்றவர்கள் தீர்மானித்தால் அந்த தாய் பொங்கி எழுவாள்.
பாஜக அரசு, தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் நியாயமான நிதியை கொடுத்தால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும். பாஜக அரசின் தடைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சட்டப்பூர்வமாக உடைத்தெறிவேன். மக்களின் ஆதரவோடு தமிழ்நாட்டை எல்லாத் துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக நிச்சயம் உயர்த்திக் காட்டுவேன்.
டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றும் அடிபணியாது. மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு சவாலாக சொல்கிறேன். டெல்லி ஆளுமைக்கு அடி பணியாது, தனித்துவம் கொண்டவர்கள் நாங்கள். நீங்கள் ஏமாற்ற வேண்டாம். எங்கள் தமிழ்நாடு டெல்லிக்கு எப்போதும் அவுட் ஆப் கன்ட்ரோல் தான். நாங்கள் உருட்டல் மிரட்டலுக்கு அடிபணிபவர்கள் இல்லை. எந்த ஷா வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது” இவ்வாறு அவர் பேசினார்.