தமிழக ஆளுநர் ஏற்பாடுசெய்துள்ள துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு உதகையில் நேற்று தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தி வருகிறார். நான்காவது ஆண்டாக, உதகை ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த 2 நாள் மாநாட்டை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த துணை வேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தரும் மாநாட்டை புறக்கணித்துள்ளார்.
துணை வேந்தர் மாநாட்டில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகரும் பங்கேற்கவில்லை. மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகமண்டலம் சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி சந்திரசேகர் திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை வேந்தர்கள் மாநாட்டில் 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தமுள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.