லண்டனில் சிம்பொனி அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இவர், 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 15,000க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தனது வாழ்நாள் கனவான, சிம்பொனியை லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் அண்மையில் அரங்கேற்றினார்.
மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூறி வருகின்றனர்.
சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற இளையராஜா, சென்னை திரும்பிய போது, தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இளையராஜா நன்றி தெரிவித்தார். அப்போதே, அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சட்டசபையில் அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடும் ஜூன் 2ம் தேதி பாராட்டு விழா தமிழக அரசால் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.