எம் சாண்ட், மணல், ஜல்லி விலையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் எம்.சாண்ட் விலை, கடந்த வாரத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது. எம்.சாண்டு மணல் விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 விலையை உயர்த்தி க்ரஷர் உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.
தமிழ்நாட்டில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் உள்ள நிலையில், 400 எம் சாண்ட் ஆலைகள் மூலம், கற்கள் தூளாக்கப்பட்டு எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குவாரி உரிமையாளர்களிடமிருந்து அரசு வசூலித்து வந்த ராயல்டி தொகை 90 ரூபாயிலிருந்து 165 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இதை குறைக்க வலியுறுத்தி கடந்த 16 ஆம் தேதி முதல் குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதையடுத்து கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும், ஜல்லி, எம்.சான்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு டன் ஒன்றுக்கு 250 ரூபாயும், யூனிட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த விலை உயர்வுக்கு பொதுமக்களும் கட்டுமான துறையினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றுக்கு ஏற்றப்பட்ட தொகையிலிருந்து, டன்னுக்கு ஆயிரம் ரூபாய் குறைத்து விற்பனை செய்வது என குவாரி உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதேபோல, சாதாரணக் கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு 33 ரூபாயாக நிர்ணயிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. விலைக் குறைப்பு காரணமாக, ஜல்லி டன் 4,000 ரூபாய்க்கும், எம்.சாண்ட் 5,000 ரூபாய்க்கும் பி.சாண்ட் 6,000 ரூபாய்க்கும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.