கிட்டத்தட்ட அ.தி.மு.க.,வில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான செங்கோட்டையனை துாக்க முதலில் தி.மு.க., பேச்சுவார்த்தை நடத்தியது வெளியில் வந்துள்ளது.
ஒரு கமர்ஷியல் சினிமா காட்சிகள் போல அதிமுகவில் விறுவிறுப்பான காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
எந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்., தனக்கு அடுத்த வாரிசு என்று யாரையும் சொல்லாமல் போனாரோ, அந்த சிக்கலால், அவருக்கு பின்னர் அ.தி.மு.க., ஜா- ஜெ., என உடைந்தது. பின்னர் ஜானகி விட்டுக் கொடுத்ததால் ஜெயலலிதா கட்சிக்கு தலைமை பொறுப்பேற்றார்.
அவராவது உடையாத இரும்புக்கோட்டையாக கட்சியை மாற்றியிருக்கலாம். ஆனால் உடைந்து நொறுங்கும் தன்மையுடைய எஃகு கோட்டையாக மாற்றி விட்டார். ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆர்., செய்த அதே தவறை செய்தார். தனக்கு பின்னர் அடுத்த வாரிசு என யாரையும் அவரும் உருவாக்கவில்லை.
இந்நிலையில் ஜெயலலிதா மரணிக்க, சசிகலா ஜெயிலுக்குப் போக… எடப்பாடி பழனிசாமி முதல்வராக எல்லாமே ஒரு விபத்து போல நடந்து முடிந்தது. அந்த சூழலில் கவுண்டர் சமூகத்தை பகைத்துக் கொள்ள வேண்டாம் என பா.ஜ.க.,வும் மௌனமாக எடப்பாடியின் தலைமைக்கு ஆதரவு கொடுத்தது. ஆனாலும் பாஜக என்ன நினைத்ததோ தெரியவில்லை, அந்த இரட்டை இலையை திட்டமிட்டு கிடப்பில் போடவைத்ததுதான் பாஜகவின் சாதுர்யமான மூவ்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி யாரிடமும் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. சசிகலா, டி.டி.வி., ஓ.பி.எஸ்., என அத்தனை பேரையும் கழட்டி விட்டவர், அரசியலில் தன் குருவாகிய செங்கோட்டையனுக்கும் செக் வைத்தார். பேசும் முகம் ஒன்று, செயல்படும் முகம் ஒன்று என எடப்பாடி அத்தனை பேரிடமும் இருமுகம் காட்டி வந்தார்.
இதனால் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, தம்பித்துரை, கே.பி.முனுசாமி என அத்தனை அ.தி.மு.க., பிரபலங்களும் எடப்பாடிக்கு அறிவுரை கூறியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த சூழலை உன்னிப்பாக கவனித்த தி.மு.க., முதன் முதலில் செங்கோட்டையனை துாக்கத் திட்டமிட்டது. அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் செங்கோட்டையன் மிக, மிக நாசூக்காக, ‘இப்போதைக்கு அப்படி ஒரு திட்டம் என்னிடம் இல்லை. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. காலம் எப்படி நகர்கிறது என பார்க்கலாம்’ என்று மட்டும் தி.மு.க.,விடம் கூறி விட்டு நாகரிகமாக நகர்ந்து விட்டார்.
இந்த விஷயத்தை சசிகலா, டி.டி.வி., ஓ.பி.எஸ்., எப்படியோ மோப்பம் பிடித்து டில்லிக்கு தகவல் பரிமாறினர். அவர்களும் எடப்பாடியுடன் பேசிப்பார்த்தனர். அங்கும் எடப்பாடி இருமுகம் காட்ட, அமித்ஷாவே நேரடியாக களத்தில் இறங்கினார். அமித்ஷாவிற்கும் செங்கோட்டையனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது டி.டி.வி., ஓ.பி.எஸ்., சசிகலா குரூப் தான்.
செங்கோட்டையனின் இமேஜ் இந்த விவகாரத்திற்கு பின்னர் விறுவிறுவென உயர அவருடன் வெளியேற எட்டு முன்னாள் அமைச்சர்களும் தயாராக உள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் கிட்டத்தட்ட பா.ஜ.க.,வில் இணையத் தயாராகவே உள்ளனர்.
ஆனாலும், பா.ஜ.க., எங்களுக்கு நீங்களும் உங்கள் இரட்டை இலை சின்னமும் வேண்டும். எனவே, நீங்கள் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றி அ.தி.மு.க.,வாக உருவெடுத்து வாருங்கள். அத்தனை உதவிகளையும் நாங்கள் செய்கிறோம். நாம் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக அறிவித்தே களத்தில் இறங்கலாம் என அமித்ஷா கூறி விட்டார். (இப்போ புரிந்து இருக்கும் பாஜக இரட்டை இலையை கொடுக்காமல் வைத்திருந்த ரகசியம்)
இந்த விஷயம் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் உள்ள அத்தனை அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கும் சென்றடைந்து விட்டது. எல்லோரும் எடப்பாடியை விட செங்கோட்டையன் சிறப்பான தலைவராக இருப்பார் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். பெரும் பிளவுக்கு அ.தி.மு.க., தயாராகப் போகிறதா? என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
-மா.பாண்டியராஜ்