தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகளிலும் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 90 அணைகள் உள்ளன. நீர்வளத்துறையின் பராமரிப்பில் 14 ஆயிரத்து 110 ஏரிகள் உள்ளன. (உள்ளாட்சிகளின் பராமரிப்பில் உள்ள குளங்களின் எண்ணிக்கை தனி). இவற்றின் மொத்தம் நீர் கொள்முதல் திறன் 224 டி.எம்.சி. ஆனாலும் இப்போது இந்த குளங்கள் ஏரிகளில் 128 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்த அணைகளில் 20 அணைகள் வறண்டு கிடக்கின்றன. 60 சதவீத அணைகளில் மிக, மிக குறைந்த நீரே உள்ளது. 1166 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன. 3434 ஏரிகள் வறட்சியின் பிடியில் உள்ளன. இவைகள் இன்னும் ஓரு மாதத்திற்குள் வறண்டு விடும்.
இந்த நிலையில் மழையும் போக்குக் காட்டி வருகிறது. வெயிலின் தாக்கம் மாநிலம் முழுவதும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் 104 டிகிரியை தாண்டி விட்டது. இன்னும் சில நாட்களில் வெப்பத்தின் அளவு 107 முதல் 110 டிகிரி வரை கூட பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், நீர் நிலைகள் முழுமையாக வறண்டு வருகின்றன. இதனால் உள்ளாட்சிகள் மக்களின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சப்ளை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றன. தமிழகத்தில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என எல்லாமே பல மடங்கு அதிகரித்து விட்டது.
இதனால் தேவைப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்து விட்டது. தேவைக்கு ஏற்ப இருப்பு இல்லாததால் குடிநீர் விநியோகத்தில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. மாநிலத்தின் பல இடங்களில் இப்போதே 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது.
.
குறி்ப்பாக கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை தொடங்கி விட்டது. மக்கள் தண்ணீர் விநியோகம் சீராகக் கேட்டு உள்ளாட்சிகளுடன் தகராறு செய்யத் தொடங்கி உள்ளனர்.
ஆனால் உள்ளாட்சிகள் பெருகி வரும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றன.
இது தவிர பல பகுதிகளில் வளர்ச்சிப்பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்பட்டுள்ளன. இதனாலும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் அவ்வளவு எளிதில் சீரமைக்க முடியாது.
தற்போது தான் ஏப்., 22ம் தேதி ஆகி உள்ளது. இனி மழை தொடங்க ஜூன் மாதம் 15ம் தேதிக்கு மேல் ஆகி விடும். ஏப்ரல், மே மாதங்களில் கோயி்ல் திருவிழாக்களும் அதிகளவில் நடக்கும். இதனாலும் தண்ணீர் தேவை அதிகரிக்கும்.
இப்படி பல்வேறு இயற்கை பருவ சூழல், வாழ்வியல் சூழல்களால் தண்ணீர் தேவை அதிகரித்து பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். குடிநீர் தேவைகளை சமாளிக்க உள்ளாட்சிகளுக்கு சிறப்பு நிதிகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், தலைமைச் செயலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்னும் நடைபெறவில்லை. இதனால் உள்ளாட்சிகளுக்கு குடிநீர் தேவைகளை சமாளிக்க சிறப்பு நிதி வழங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக தண்ணீர் விநியோகத்தில் மாநிலம் முழுவதும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு குடிநீர் தேவையை சீரமைக்கவும், எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு ஒரு நல்ல விநியோகத்தொடரை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மா.பாண்டியராஜ்