தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் மூலமாக மிகக்குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் மருந்தகம்” என்ற திட்டம் தொடங்கப்படும் என்று கூறி இருந்தார். இதன் மூலம், பொதுமக்களுக்கு, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அதற்கு ஏற்ப, தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் தொடங்கி வைத்தார்.
அதே சமயம், சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை, கொளத்தூர் உட்பட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. அதிகபட்சமாக மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சாவூரில் 40 என தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொதுமக்களின் மருத்துவச் செலவு சுமார் 75 சதவிகிதம் வரை குறையும் என்று மருத்துவரும், திமுக எம்.எல்.ஏ.வுமான எழிலன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
‘நீரிழிவு நோய்க்கான METFORMIN எனப்படும் மருந்து, தனியார் மருந்தகங்களில் 70 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், முதல்வர் மருந்தகத்தில் வெறும் 11 ரூபாய்க்கு கிடைக்கும் என்றார்.
இதே போன்று, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு, மாதந்தோறும் மருந்து வாங்க தனியார் மருந்தகங்கள் மூலமாக 3 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், அதே மருந்துகளை முதல்வர் மருந்தகத்தில் ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும் என்று எழிலன் குறிப்பிட்டார். 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கும் என்றும் திமுக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
முதல்வர் மருந்தகங்கள் மூலம் அரசு மருத்துவமனைகள் , நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் எந்த வகையிலும் நிறுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.