மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில், அரசின் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் :-
“வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழும் நாடு இந்தியா. பல்வேறு வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பாஜக கூட்டணி அரசு தனது செயல்பாடுகள் அனைத்தையும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்கள், இலங்கை தமிழ் மக்களை வஞ்சித்தது.
நீட், தேசிய கல்விக் கொள்கை அடித்தட்டு மக்களை பாதிக்கிறது. அனைவரும் நாட்டு மக்கள் என்ற உணர்வோடு வாழ்ந்து வரும் நிலையில், பாஜக கூட்டணி அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
வக்ஃப் வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசு தலையீடு அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பதாக முதலமைச்சர் விமர்சித்தார்.
அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை, பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இருப்பதாக முதலமைச்சர் கூறினார்.
ஆனால், அதற்கு மாறாக சிறுபான்மையின இஸ்லாமிய மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து குரல் எழுப்பியதாகவும் முதலமைச்சர் கூறினார்.
முன்னதாக இந்த தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.