”மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பகீர் புகார் கூறி உள்ளார்.
தமிழக அரசு, தனியார் மற்றும் மத்திய பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, ஆளுநர் ரவி தலைமையில் ஊட்டியில் தொடங்கியது. குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு உட்பட்ட 17 பல்கலைகளில் இருந்து துணைவேந்தரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை.
இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நேரில் சென்று நிறைய பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை மோசமாக உள்ளது.
மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
துணைவேந்தர்களின் வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டி, ‘மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது’ என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் கல்வித் தரம் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை. சில துணைவேந்தர்கள் ஊட்டிக்கு வந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. கல்வி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல துணைவேந்தர்கள் மாநாடு உதவியாக இருக்கும். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள். இதுபோன்ற சூழல் இதுவரை ஏற்பட்டது இல்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிங்கிள் டிஜிட்டல் எண்களை கூட படிக்கத் தெரியவில்லை. இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.