பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை உறுதி செய்யும் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் செய்வதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்த உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டது. மேலும், துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசின் அதிகாரத்தை உறுதி செய்வது உள்ளிட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த சூழலில், கடந்த 17ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், கடந்த ஆண்டைப் போன்று தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை வரும் 25ம் தேதி உதகை ராஜ்பவனில் நடத்த உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்கும்படி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு எதிர்ப்பு
துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருப்பதற்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறியதும், ஆளுநர் பதவி விலகி இருக்கவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும்” என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
துணை வேந்தர்களை மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு செய்திருப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மாநாட்டை துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து புதிதாக ஒரு சர்ச்சையை ஆளுநர் உருவாக்கி உள்ளதாகவும், இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கையால் உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசுக்குமான அதிகாரப்போட்டிக்கு அடித்தளம் விடுவதுபோல இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.