பழனி மாவட்டம், உதயமாவதில் தி.மு.க.,விற்குள் உருவாகியுள்ள அதிகார போட்டி தான் காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
புதிதாக ‘பழனி மாவட்டம்’ உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் எழுந்திருக்கும் நிலையில், ஆளுங்கட்சியில் ஒரு தரப்பினர் புதிய மாவட்டத்துக்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றியிருப்பதும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக, திருப்பூர் மாவட்ட தி.மு.க-வில் சூடு பறக்கிறது.
ஆன்மிக நகரமான பழனி, தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கிறது. பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு, ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளை இணைத்து, புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ‘இதற்கான அறிவிப்பு, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியாகும்’ என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் தரப்பு, பழனி மாவட்டத்தை உருவாக்குவதற்கு எதிராக நிற்பதும், உடுமலை, மடத்துக்குளம் தி.மு.க நிர்வாகிகள் புதிய மாவட்டத்துக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து தி.மு.க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: “திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் 5-ல் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. இவற்றில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளில் பொருளாதாரத்திலும் கட்சிரீதியிலும் அ.தி.மு.க-வினர் வலுவாக இருக்கின்றனர். அவர்களை எதிர்கொள்ளச் சரியான கள அரசியல்வாதி தி.மு.க.,வில் இல்லை என்ற குறை தலைமைக்கு இருந்து வருகிறது.
அதேவேளையில், அண்டை மாவட்டமான திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி, அவரின் மகன் ஐ.பி.செந்தில்குமாரின் அரசியல் தலையீட்டால், கடும் அப்செட்டில் இருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி. எனவே, பழனியைத் தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கித் தர வேண்டுமென்பது அவரது நீண்டகாலக் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம், பழனி, திருப்பூர் மாவட்டத்தின் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய நான்கு தொகுதிகளை இணைத்து, புதிதாக பழனி மாவட்டத்தை உருவாக்கி, அதைக் கட்சிரீதியாக சக்கரபாணி வசம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருக்கிறது கட்சித் தலைமை.
சக்கரபாணியை மாவட்ட அமைச்சராக நியமிக்கும்போது, சமூக ரீதியிலும் கட்சிக்குக் கூடுதல் பலமாக இருக்கும் எனத் தலைமை கருதுகிறது. அதேநேரம், திருப்பூர் பொறுப்பு அமைச்சரான மு.பெ.சாமிநாதன், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகள் தன் கையைவிட்டுப்போனால், தனது அதிகார எல்லை சுருங்கிவிடும் என நினைக்கிறார். தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபனும் ‘தனது பதவி பறிபோய்விடும்’ என நினைக்கிறார். எனவே, தலைமையின் முடிவுக்கு எதிராக, தங்களது ஆதரவாளர்களையும் எதிர்க்கட்சியினரையும் தூண்டிவிட்டுப் பிரச்னை செய்கிறார்கள்” என்றனர்.
இதற்கிடையே, உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், உடுமலை, மடத்துக்குளம் ‘மக்கள் பாதுகாப்பு பேரவை’யின் நிர்வாகியுமான எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி, “மேற்கு மண்டலத்தில், ‘பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்’ என்பது எங்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கலாச்சாரரீதியாக தொடர்பு இல்லாத உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளை தென்மண்டலமான பழனியுடன் இணைத்து, புதிய மாவட்டம் உருவாக்கப்போவதாகக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், கோவை மண்டலத்திலுள்ள காவல், பதிவுத்துறை ஆகிய துறைகள் மதுரை மண்டலத்துக்குச் சென்று விடும். மக்கள் இதனால் சிரமத்துக்கு உள்ளாவார்கள். புதிய மாவட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினர், அவர்களுக்கான லாபத்தை மட்டுமே மனதில்வைத்துப் பேசுகின்றனர்” என்றார்.
உடுமலை வியாபாரிகள் சங்க உறுப்பினரான கோபால், “உடுமலையிலிருந்து 60 கி.மீ தூரம் பயணித்து திருப்பூரிலுள்ள ஆட்சியர், எஸ்.பி அலுவலகங்களுக்குச் சென்று வருகிறோம். இந்த நிலையில், புதிய மாவட்டம் உருவாகி, பழனியிலேயே… ஆட்சியர், எஸ்.பி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்தால், எங்களுக்கு அது உதவியாக இருக்கும்.
மேலும், மாவட்டத் தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உடுமலைக்கு வர வாய்ப்பிருப்பதால், இது வரவேற்கக்கூடிய திட்டம் தான்” என்றார்.
இது குறித்து உடுமலை அ.தி.மு.க எம்.எல்.ஏ உடுமலை ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, “தி.மு.க., அரசியல் லாபத்துக்காக பழனி மாவட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது. தங்களது சுயநலத்துக்காக மக்களைப் பலிகடா ஆக்கக் கூடாது. மாவட்டத்தைப் பிரித்தே ஆக வேண்டு மென்றால், எட்டு தொகுதிகளுள்ள திருப்பூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புதிய மாவட்டத்தை உருவாக்கலாம் அல்லது பொள்ளாச்சி மாவட்டத்தை உருவாக்கலாம். ஆனால், பழனி மாவட்டம் தேவையற்றது” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி கருத்து தெரிவிக்கவில்லை. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் “பழனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்து அதிகாரபூர்வமாக எனக்குத் தகவல் வரவில்லை. சிலர் ஏதோ காரணத்துக்காக பழனி மாவட்டம் வேண்டும் என்கின்றனர். ‘பழனியுடன் எங்கள் தொகுதிகளை இணைக்க வேண்டாம்’ என உடுமலை, மடத்துக்குளம் ‘மக்கள் பாதுகாப்பு பேரவை’யினர் என்னிடம் மனு அளித்திருக்கின்றனர். மக்கள் பிரதிநிதியாக அவர்களின் குறையை முதல்வரிடம் கொண்டுசேர்ப்பது எனது கடமை. மற்றபடி, நானோ அல்லது மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபனோ இதில் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை” என்றார்.