அதிமுக – பாஜக கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
அதிமுக நிர்வாகிகள், தலைமை அனுமதி இல்லாமல் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என அதிமுக தலைமை நேற்றுமுன்தினம் அறிவித்து இருந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இன்றைக்கு வரும் வழியில் இவ்வளவு கொடி பறக்கிறது என்றால் உங்களுடைய ஒவ்வொருவரின் உழைப்பும் அதில் இருக்கிறது. இந்த நேரத்தில் எனக்கு அது நன்றாக தெரியும். ஏனென்றால் நான் அண்ணா திமுகவில் கிளை செயலாளராக இருந்து பணியாற்றி மேலே வந்துள்ளேன். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும்.
இந்த ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி, அதனை அகற்ற வேண்டும். பாஜக நிர்வாகிகள் பூத் கமிட்டியை சரி செய்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். நான் நினைத்தது தற்போது நடைபெற்றுள்ளது. அமித்ஷா தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி அமைய வேண்டும் என நினைத்தேன், அது தற்போது நடந்துள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்கள் மிக மோசமான நிலையில் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவிட்டால் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம். கூட்டணி குறித்து மேல் இடத்தில் உள்ளவர்கள் முடிவெடுப்பார்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இதனிடையே கூட்டணி குறித்து அதிமுக நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும் அதிமுகவின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், அதிமுகவின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், அதிமுக தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.