“கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. கூட்டணி ஆட்சித் தான்” என்று அதிமுக – பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று கூடியதும் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தக் கோரி அமளி செய்தனர்.
தொடர்ந்து அனுமதி மறுக்க, அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பின் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இன்று (நேற்று) அமைச்சர்களின் மீது விதி எண் 72 இன் கீழ் அமைச்சரின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் அதைப்பற்றி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதை கண்டித்து இன்று (நேற்று)பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
அமைச்சர்கள் கே.என் நேரு, பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். ஆனால் சபாநாயகர் அதை இன்று (நேற்று) எடுத்துக்கொண்டு எங்களுக்கு பேச அனுமதிக்கவில்லை. கடந்த காலங்களில் இது போன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் இரவில் எடுத்துக்கொண்டு வாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இன்று(நேற்று) அனுமதிக்கவில்லை” என்று பேசினார்.
தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதில், “நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இவர்கள் ஏன் எரிச்சல் அடைகிறார்கள். திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. எங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி வைத்துள்ளோம். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் விருப்பம்.” என்று தெரிவித்தார்.
அப்போது அமித் ஷா கூட்டணி அரசு அமைக்கப்படும் என கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இ.பி.எஸ்., அளித்த பதில்:
கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. நீங்கள் ஏதோ தப்பாக புரிந்து கொண்டு ஏதோ வித்தை காட்டுக்கிறீர்கள். இந்த வித்தையை எல்லாம் விட்டுருங்க.
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். அதை புரிந்து கொள்ளுங்கள். டில்லிக்கு பிரதமர் மோடி, தமிழகத்துக்கு நான் என்று அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார். இதில் ஏதோ விஞ்ஞான மூளையை எல்லாம் பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விட்டுருங்க, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.