மேகதாதுவில் எந்த கொம்பனாலும் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டமுடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே விவாதம் நடந்தது.
”சரபங்கா திட்டத்தில் ஒரு குளத்தில் மட்டும்தான் அதிமுக ஆட்சியில் நீர் நிரப்பி இருந்தனர். திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் தாமிரபரணி ஆறு – கருமேனியாறு திட்டத்தை கிடப்பில் போட்டது அதிமுக” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இதற்கு ”தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்தை நான் நிறுத்தவில்லை. அதற்கான நிலத்தை உங்கள் ஆட்சியில் நீங்கள் கையகப்படுத்தவில்லை. அதனால் தாமதம் ஏற்பட்டது. மேலும் அந்த திட்டத்தின் வழிகாட்டு மதிப்பும் உயர்ந்து விட்டது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அப்போது எழுந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ”நான் நிறுத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அவர் திடீர் திடீரென உண்மையை பேசிவிடுவார். அவர் நிறுத்தவில்லை, அவருக்கு முன்பாக இருந்த அம்மா நிறுத்தி விட்டார்” எனத் தெரிவித்தார்.
”தாமிரபரணி கருமேனியாறு திட்டத்தில் மத்திய அரசு நிலத்தின் மதிப்பை அதிகரித்தது. இதனால் நிலத்தை எடுப்பதில் காலதாமதம் ஆனது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேகதாது:
மேகதாது அணை குறித்து அவையில் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், “மேகதாதுவில் அணை கட்டுவது அவ்வளவு எளிதல்ல. முதலில் டிபிஆர் தயார் செய்ய வேண்டும். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எந்த கொம்பனாலும் தற்போது மேகதாதுவில் கட்ட முடியாது” எனத் தெரிவித்தார்.
அதேபோல், “வண்டல் மண் தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் பேசியபோது வேட்டியை மடித்து கட்டி கடப்பாரையுடன் தூர்வாரினார் எடப்பாடி பழனிசாமி என பேசினார்.
ஆர்.பி.உதயகுமார் சினிமாவுக்கு வசனம் எழுத சென்றிருக்கலாம். அவர் மட்டும்தான் வேட்டியை மடித்து தூக்கி கட்டினாரா? நாங்க என்ன பேன்ட் சர்ட்டா போட்டுள்ளோம்?” என பேசினார் அமைச்சர் துரைமுருகன். அவையில் சிரிப்பலை எழுந்தது.