பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்கள் செலவிடுவதாகக் குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்தியதற்காக இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சங்கர் ஷா, குமரேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரி நிறைவேற்றாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில், வாக்களார் சரிபார்க்கும் பணியில் அதிகாரி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அரசு அதிகாரிகள் எல்லா நேரமும் வாக்காளர் சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளில் 60% நேரமும், அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளில் 25% நேரமும் நீதிமன்றம் செலவிடுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி,
பொதுமக்களுக்கான வழக்குகள் விசாரணைக்காக வெறும் 7% நேரத்தை மட்டுமே செலவிடுவதாக தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, பொதுமக்களுக்கு பணி செய்வது தான் தங்கள் கடமை என்பதையே அரசு அதிகாரிகள் மறந்து விட்டதாகவும் தெரிவித்தார். இவ்வாறு அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளால் தான் நீதிமன்றங்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாகவும், அரசுக்கும் அவபெயர் ஏற்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
பணி சுமை, நேரமின்மை எனக்கூறி, பணியில் இருந்தும் கடமையில் இருந்தும் அதிகாரிகள் விலகி செல்ல முடியாது என தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்தால் மக்கள் ஏன் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை நாடப்போகிறார்கள் என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும், வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மீது கருணை காட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி வேல்முருகன், இது போன்ற வழக்குகளில் கடமை தவறிய அரசு அதிகாரிகளுக்கு எந்த வித கருணையும் காட்ட முடியாது என்றும் கருணை காட்டினால் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விடுவார்கள் எனக் கூறி, இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த இருப்பதாகக் கூறி, விசாரணையை ஜூன் 6 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.