”கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை கே.கே.நகரில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் : உங்களை கூட்டணிக்கு தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்?
இது குறித்து சீமான் கூறியதாவது :-
ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். இது இன்றைக்கு, நேற்று அல்ல. நீண்ட காலமாக அழைப்பு விடுத்துதான் வருகிறார்கள். உங்களுக்கும் தெரியும். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். திரும்ப திரும்ப சொல்வதற்கு ரொம்ப ஒரு மாதிரியாக இருக்கிறது.
அதையே திரும்ப திரும்ப பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. கூட்டணிக்கு அழைக்கிறாங்க, அதற்கு நன்றி. ஆனால் எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பித்தான். கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. தேர்தல், கட்சி அரசியல் செய்யும் கட்சிகளுக்குத் தான் கூட்டணி முக்கியம், நாங்கள் மக்கள் அரசியல் செய்கிறோம். நாங்கள் மக்களோடு சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம்.
5வது முறையாக தனித்து ஒரு கட்சி போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சியாகத் தான் இருக்கும். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். 117 பெண்களுக்கும், 117 ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்பேன். அடுத்தவர்களை நம்பி பயணத்தை தொடங்கினால் இலக்கை அடைய முடியாது. தனித்து தான் போட்டியிடுவேன்.
வெற்றி, தோல்வியைத் தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி நாங்கள். தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க., விற்கும் ஊழலில் வித்தியாசம் இல்லை. இரண்டுமே ஊழல் கட்சிகள் தான் அ.தி.மு.க.,வில் மட்டும் ஊழல் இல்லாமலா இருக்கிறது? த.வெ.க., தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.