அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பணியில் சேர்ந்த ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் என 900 பேர் குற்றவாளி ஏனக்கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் பிப்-2 க்கு தள்ளி வைத்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக்கழத்தில் வேலை வாங்கிதருவதாகக் கூறி பணமோசடியில் கடந்த 2011-15ல் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட பலர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு 3 வழக்குகளைப் பதிவுசெய்தனர். இந்த வழக்கு சென்னை எம்பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் குற்றப் பத்திரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தற்போது பணியில் உள்ள ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் என 900 பேர் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது, மேலும் இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கைக்கு அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி, இந்த வழக்கில் 900 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அது தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிக்கை மற்றும் போலீசாரின் விசாரணைக்கு அனுமதி கிடைத்ததும், அடுத்த கட்டமாக நீதிமன்ற விசாரணை நடைமுறை தொடங்கும் என அறிவித்து விசாரணையை பிப்-2 க்கு தள்ளி வைத்துள்ளார்.