திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புளியந்தோப்பில் உள்ள ராதாகிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் திட்டப் பகுதிகளில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 பயனாளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலையில் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்தார். அவருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி உள்ளதாகக் கூறினார். மேலும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு மீது பொதுமக்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் குடியிருப்புக்கான ஆணைகளைப் பெற்ற பயனாளிகளுக்கு அசைவ விருந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளுக்கு பிரியாணியை பரிமாறினார். மட்டன் பிரியாணி, சிக்கன் 65 அடங்கிய விருந்து வைக்கப்பட்டது.