திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
திருவண்ணாமலை,கரூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.
அதன்படி, கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. 34 கோடி ரூபாய் செலவில் நான்கு தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பூங்கா, ஓராண்டில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்காக்களை தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது. அந்த வகையில், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் ஏற்கனவே மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.