மனோ தங்கராஜ் அமைச்சராக அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.
அதன்படி, செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. அதேபோல், அவரிடம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
இதேபோல், பொன்முடி வசம் இருந்த வனத்துறை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து நேற்று கிண்டி ஆளுநர் மாளிகையில் மனோ தங்கராஜ் அமைச்சராகப் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மனோ தங்கராஜ். கடந்த 2016 ஆம் ஆண்டு அவருக்குச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முதல்முறையாக திமுக தலைமை வாய்ப்பு கொடுத்திருந்தது. அந்த தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக ஆட்சியில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அமைச்சரவையில் இடமில்லாமல் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு கவனித்து வந்தார்.
இந்நிலையில் ஏழே மாதங்களில் மீண்டும் மனோ தங்கராஜூக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை அமைச்சரவையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து வரும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை திமுக கூட்டணி முழுமையாகப் பெறுவதற்கு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மனோதங்கராஜுக்கு அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.