அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிட செய்த நீதிபதி, இந்தப் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என்றும் அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார்.
அவரது பேச்சு பெண்களை, சைவ வைணவ மதங்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என சுட்டிக்காட்டினார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என தமிழக டிஜிபி மாலை 4:45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
வில்லை விட்டு புறப்பட்ட அம்பு போல அவருடைய பேச்சு பெருவாரியாக சென்றடைந்து விட்டது என்று குறிப்பிட்ட நீதிபதி, மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை என்றும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். நன்றாக தெரிந்தே அமைச்சர் பொன்முடி இவ்வாறு பேசியிருக்கிறார் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு அடங்கிய வீடியோ இன்னும் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றன என குறிப்பிட்ட நீதிபதி, இதே பேச்சை வேறு எவரேனும் பேசி இருந்தால் இதற்குள் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.
ஊழலை எப்படி சகித்துக் கொள்ள முடியாதோ அதேபோல வெறுப்பு பேச்சையும் சகித்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, ஏற்கனவே நடிகை கஸ்தூரி, எச் ராஜா, அண்ணாமலை போன்றோருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டினார். ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடியின் தண்டனையும் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தவறாக பயன்படுத்தும் வகையில் அவர் செயல்படுவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடலாம் எனவும் குறிப்பிட்டார். அதனால் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா இல்லையா என்றும், வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் ஏன்? என்பது குறித்து டிஜிபி காணொளி காட்சி மூலமாகவோ அல்லது அரசு தலைமை வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை மாலை 4: 45 மணிக்கு தள்ளி வைத்திருந்தார்.
5 புகார்
இந்த வழக்கு மாலை 4:45 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடி பேச்சு தொடர்பாக 5 புகார்கள் வந்துள்ளன. ஏப்., 12ல் புகார் மனு பெறப்பட்டது எனத் தெரிவித்தார்.
ஆதாரம் உள்ளது
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
ஒரு புகாரில் மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 4, 5 வழக்குப்பதிவு செய்தால், விசாரணை நீர்த்து போய்விடும். புகார் இல்லாமல் போலீஸ் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அமைச்சராக இருப்பவர் கீழ்த்தரமாக பேசலாமா? இதுபோன்று மற்றவர்கள் பேசியிருந்தால் போலீஸ் அமைதியாக இருந்து இருக்குமா?
பொன்முடி பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்த அவர், இந்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.,23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.