தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி 72 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் வயோதிகம் காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12.15 மணியளவில் குமரி அனந்தன் உயிர் பிரிந்தது.
குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் அஞ்சலி
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு முதல்-அமைச்சர் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.அப்போது தந்தையை இழந்து மனமுடைந்து அழுத தமிழிசை சவுந்தரராஜனின் கைகளைப் பிடித்து முதல்-அமைச்சர் ஆறுதல் கூறி தேற்றினார்.
ஆளுநர் அஞ்சலி
அதனை தொடர்ந்து சென்னை சாலிகிராமத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி குமரி அனந்தன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் குமரி அனந்தன் உடலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
குமரிஅனந்தன் தனது கடைசி விருப்பமாக தனது பெற்றோரை அடக்கம் செய்த இடத்தில் தன்னையும் அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை நேற்று (9ம் தேதி)கூடியவுடன் அவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இந்த நிலையில் மறைந்த குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அவரது பெருவாழ்வை போற்றிடும் வகையில் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
72 கூடுகள் முழங்க இறுதிச் சடங்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.