புழல் சிறையில் திடீர் சோதனை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் சென்னை புழல் மத்திய சிறையில் திடீர் சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவிடம், புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக தங்களது கருத்துகளை நீதிபதிகள் பகிர்ந்து கொண்டனர்.
சிறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் புழல் சிறையின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்றே சோதனை நடத்தியதாகவும், சிறையின் அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருந்ததாகவும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், கைதிகளுக்கான உணவை சாப்பிட்டு பரிசோதித்து பார்த்தபோது உணவு தரமானதாகவும், சுவையாகவும், இருந்ததாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதே போல் கொடுங்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்தபோது, அவர்களும் சிறை வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்ததாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். புழல் சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்
அதோடு, சிறை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக சில யோசனைகளை வழங்க இருப்பதாகவும், அது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து எந்த ஆலோசனைகளை வழங்கினாலும் அதனை செயல்படுத்த அரசு தயாராக இருப்பதாக பதிலளித்தார்.
சிறைகளின் வசதிகளை தமிழக அரசு சர்வதேச தரத்தில் உயர்த்தி உள்ளதாகவும், கோவை மத்திய சிறையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை மூலம் விவசாயம் சிறப்பாக நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், சிறை பெட்ரோல் நிலையம் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.