தவெக தலைவர் விஜய் ‘கொளுத்திப்போட்ட ஆட்சியில் பங்கு’ என்ற வெடிகுண்டு, எல்லா கூட்டணியிலும் வெடித்து அந்த கூட்டணிகளுக்குள் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் தி.மு.க.,வின் கொள்கை. கடந்த முறை அதாவது 2006 முதல் 2011 வரை முதல்வராக இருந்த கருணாநிதி, தனி மெஜாரிட்டி இல்லாமல், கூட்டணி கட்சிகளின் தயவுடன் ஆட்சி நடத்தினாலும், இவர் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு தரவில்லை. ‘மைனாரிட்டி அரசு’ என தொடர்ந்து ஜெயலலிதா விமர்சித்தாலும் கவலைப்படாமல் ஐந்து ஆண்டு காலத்தையும் கருணாநிதி பூர்த்தி செய்தார். அதே காலகட்டத்தில் மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க., பங்கு பெற்று இருந்ததையும் அனைவரும் கவனித்தனர்.
இப்படித்தான் தமிழகத்தில் இதுவரை ஆட்சி நிலவரம் இருந்துள்ளது. கடந்த ஆண்டு கட்சி தொடங்கிய விஜய், ‘எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு ஆட்சியிலும் பங்கு தருவோம்’ என்று ஒரு வெடிகுண்டை வீசினார். அப்போதே விஜய்யின் இந்த அறிவிப்பு தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது திருமாவளவன் கட்சியில் இருந்த ஆதவ்அர்ஜூன், எங்களுக்கும் கூட்டணியில் பங்கு வேண்டும் என கொடி பிடிக்க, திருமாவளவனுக்கு தி.மு.க., கடும் நெருக்கடி கொடுத்து ஆதவ்அர்ஜூனவை கட்சியில் இருந்தே விரட்ட வைத்தது.
இப்போது ஆதவ்அர்ஜூனா தவெகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அடுத்து அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க.,வும், எடப்பாடி தான் முதல்வர், ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அறிவித்துள்ளது. இந்தநிலையில் தி.மு.க., கூட்டணியில் இருக்கும்… திருமாவளவன் ‘என்னையும், தி.மு.க., கூட்டணியில் இருந்து பிரிக்க சதி செய்தனர். தங்களது கூட்டணிக்கு வருமாறு என்னுடனும் பேச்சு நடத்தினர். அது நடக்கவே… நடக்காது’ என கூறியுள்ளார்.
அதாவது இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விடுத்ததன் மூலம், தி.மு.க., கூட்டணியில் தனது டிமாண்டை அதிகரிக்க செய்துள்ளார். இதன் உள்நோக்கம் தனக்கும் கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்பது தான். இதனை தான் மறைமுகமாக திருமாவளவன் சொல்லியுள்ளார் என தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்குள், காங்., அடுத்த பிரச்னையை கொளுத்திப்போட்டுள்ளது. அதாவது ‘தமிழக காங்., கட்சியின் மாநில செயலாளர் ஷெரீப், சென்னை முழுக்க போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும். செல்வப்பெருந்தகைக்கு துணை முதல்வர் பதவி வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.
இந்த போஸ்டர்கள் சென்னை முழுக்க பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., கூட்டணிக்குள்ளும் பெரும் விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. ஆனால் இந்த விஷயம் பற்றி செல்வப்பெருந்தகை அலட்டிக்கொள்ளவில்லை. ‘நான் இது குறித்து ஷெரீப்பிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். அவர் அளிக்கும் பதில் குறித்து காங்., தலைமைக்கு தெரியப்படுத்தி, அவர்களின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுப்போம். கூட்டணி விஷயத்தில் காங்., தலைமை தான் முடிவெடுக்கும்’ என கூறியுள்ளார்.
அதாவது தமிழகத்தில் எழுந்துள்ள ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை காங்., தலைமையிடம் தெரியப்படுத்துவோம் என மறைமுகமாக கூறியுள்ளார். ஷெரீப் ஒட்டிய போஸ்டரை விட… செல்வப்பெருந்தகையின் இந்த மழுப்பல் தி.மு.க., கூட்டணியில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
ஆக இரு அணிகளிலும் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் வெளிப்படையாக கேட்கத் தொடங்கி விட்டது. இனி நாளுக்கு நாள்… இந்த விவகாரம் சூடுபிடிக்கும். பொதுமக்களுக்கு மிகப்பெரிய அரசியல் விருந்து… அதுவும் பல மாதங்களுக்கு நடக்கும் அரசியல் விருந்தும் தயாராகி வருகிறது.
-மா.பாண்டியராஜ்